மேட்டூர்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 629 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 250 கன அடி தண்ணீரும் என 2 அணைகளில் இருந்தும் மொத்தம் இன்று காலை 44 ஆயிரத்து 879 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி நாட்றாம்பாளையம் உள்பட பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர்கரை புரண்டு ஓடுகிறது. அருவிகளுக்கு செல்லும் நடைபாதையில் 3 அடிக்கும் மேல் தண்ணீர் செல்கிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 24 -வது நாளாக தடை நீடிக்கிறது
. ஆடிப்பெருக்கு விழாவான இன்று ஒகேனக்கலில் ஏராளமானோர் குவிந்து புனித நீராடுவது வழக்கம். ஆனால் நீர்வரத்து அதிகரிப்பால் இன்று ஒகேனக்கல் செல்ல முடியாமல் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய், உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.12 அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் சிறுவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும், ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துணி துவைக்க, புகைப்படம் எடுக்க தடை விதித்து கல்வடங்கம், கோனோரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இயக்கப்பட்டு வரும் விசைப்படகு போக்குவரத்து 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் 10 கி.மீ. சுற்றி செல்கிறார்கள். மேலும் மேட்டூர் காவிரி கரையேர பகுதிகளில் வருவாய்துறையினர், உள்ளாட்சி துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் காவிரி கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.