December 6, 2024

ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு?

ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகத்தில் பரவக்கூடிய தன்மை உள்ளதால் கடைகள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் ஆலோசனை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடிய வைரசாக இருப்பதால் தொடக்கத்திலேயே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் தொற்று பாதிப்பு அதிகமாவதை தடுக்க முடியும். பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வகுப்புக்கு செல்வதால் அதன் மூலம் இவ்வகை வைரஸ் பெற்றோர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

சளி, இருமலுடன் மாணவர்கள் வகுப்புக்கு செல்வதை தடுக்க முடியாது. அவர்கள் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவக்கூடும். அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழா கொண்டாட்டங்கள், இறப்பு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் கூடுவதால் தொற்று வேகமாக பரவும்.

பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய தியேட்டர், மால்கள், பொழுது போக்கு மையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க இப்போதே ஒருசில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளதால் அங்கிருந்து வந்த பயணிகள் மூலம் தமிழகத்திற்கு வந்து விட்டது. இதனை கட்டுப்படுத்த உடனடியாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாக சென்று செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் வீரியத்தை கட்டுப்படுத்தலாம். அரசியல், சமுதாய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் உடனே கொண்டு வர வேணடும்.

வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகத்தில் பரவக்கூடிய தன்மை உள்ளதால் கடைகள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். இரவு நேர ஊரடங்கு அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.