பீகாரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய ஒன்றிய பாஜக அரசுதான் காரணம், அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், ‘இந்தியா’ கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கிறார். அதற்கு முன்பு பீகாரில் 2020ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. எனினும், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் இடையே ஏற்பட்ட தொடர் மோதல் போக்கு காரணமாக நிதிஷ் குமார், கடந்தாண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டார். இருந்தாலும் அவருக்கு ‘இந்தியா’ கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரலாம் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளியாவதும், அதை நிதிஷ் குமார் மறுப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணிக்கு மீண்டும் நிதிஷ் குமாரை வரவேற்போம் என்று ஒன்றிய சமூக நீதித் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்தார். இந்நிலையில், பீகாரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோர் பங்கேற்ற மோதிகாரி மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், முதல்வர் நிதிஷ் குமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைய முட்டுக்கட்டைகள் இருந்தன.
ஆனால், 2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் (பிரதமர் மோடி பதவியேற்பு) பிறகு பணிகள் நடைபெற்றன’ என்று கூறினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சாம்ராட் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘நிதிஷ் குமார் சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் மனிதராகிவிட்டார். உண்மையில் அவர் பிரதமர் மோடிக்கு நன்றியுடன் நடந்திருக்க வேண்டும். பீகாருக்கு மத்திய பல்கலைக்கழகம் மட்டுல்லாது, வேறு பல திட்டங்களையும் பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். மேலும், நிதிஷ் குமார் தொடர்ந்து பீகார் முதல்வராக இருக்க காரணமும் மோடிதான். பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாருக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன’ என்றார்.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி