வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி பான்வான் கேங்க் 2 நாள் பயணமாக கடந்த 18-ந்தேதி இந்தியா வந்தார். அவர் புதுடெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பேசப்பட்டது. அப்போது பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், ‘கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் சென்ற போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கூட்டு தொலை நோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது. இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும், அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்தின் பாதையை அமைக்கும் என நம்புகிறேன்’ என்றார். இதைத்தொடர்ந்து இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வியட்நாமின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணையான ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணையை இந்தியா வியட்நாமுக்கு பரிசாக வழங்குவதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஏவுகணையை ஏந்தி செல்லும் ரோந்து கப்பலான ஐ.என்.எஸ். கிர்பான் 1,350 டன் எடை உள்ள குக்ரி வகை ஏவுகணை கார்வெட் ஆகும். இது கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது 91 மீட்டர் நீளம், 11 மீட்டர் கற்றை மற்றும் வேக திறன் கொண்டது. கடலோர பாதுகாப்புக்கும், கடலில் ரோந்து செல்வதற்கும், கடல் கொள்ளை எதிர்ப்பு பணியிலும் இந்த கப்பல் மிகவும் உதவியாக இருக்கும்.
More Stories
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்