கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் பல நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க., டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால் தே.மு.தி.க.வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பிறகு ஒரு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்தது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது அந்த கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பிடித்தது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அவரை சந்திப்பதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண உதவியை விஜயகாந்த் வழங்கினார்.
இதன் மூலம் தி.மு.க.- தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் இதையே விரும்புகிறார்கள். தற்போதைய சூழலில் தனித்து போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே உள்ளது என்று தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பல நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.
அதனை உள்ளாட்சி தேர்தலில் சரிகட்டும் விதத்தில் தே.மு.தி.க.வின் செயல்பாடு இருக்கும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தே.மு.தி.க.வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்டது போல உள்ளாட்சி தேர்தல் களத்தில் நடந்து விடக்கூடாது என்பதில் அந்த கட்சி தீவிரமாக உள்ளது.
இதையடுத்து தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற வகையில் இந்த முறை கட்சி நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவதாக தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைத்தால் அதை வைத்து கட்சியை மேலும் பலப்படுத்த முடியும் என்பதே அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையாக உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்களை கட்சி தலைமையிடம் தெரிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்