March 1, 2024

இருள் நீக்கும் இருக்கன்குடி மாாியம்மன்

இந்தியாவில் பழைமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சார சிறப்புகளுக்கு பெயர் பெற்றது தமிழ்நாடாகும். ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்த பகுதிக்குரிய சிறப்புகளுடன் அமைந்துள்ளன. தமிழ் நாட்டில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி என்ற சிற்றூரில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆண்டு முழுவதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்று ஆடித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் சிவயோகி ஞானசித்தர் என்ற ஒரு சித்தர் வசித்து வந்தார். பராசக்தியின் தீவிர பக்தரான அவர், ‘’நான் யோகநிஷ்டையாகும் இடத்தில் தாங்கள் சிவசொரூபியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும்‘’ என்று பராசக்தியிடம் வரம் கேட்டார். வரமளித்த அன்னை, ‘’நீ யோகநிஷ்டையாகும் இடம் இரு நதிகள் சங்கமிக்கும் இடமாக இருக்க வேண்டும்‘’ என்று கூற, அதன்படியே அமைந்த இந்த இருக்கன்குடி என்ற இடத்திற்கு வந்து நிஷ்டையில் ஆழ்ந்தார் சித்தர்.

அம்பாள் திருவாக்கு அருளியபடி சித்தருக்கு காட்சி கொடுத்தார். தாம் தரிசித்த அம்மனின் உருவத்தை மற்றவர்களும் கண்டு தரிசித்து அவர்களுடைய வினைகள் யாவும் நீங்கி வளமோடு நலமோடும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இடத்தில் அம்மனை சிலையாக வடித்தார். சித்தர் வடித்த சிலையிலேயே அம்பாள் ஐக்கியமானாள். வெகுகாலம் கழித்து ஏற்பட்ட ஊழிப் பிரளயத்தில், இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது.

பிற்காலத்தில், ஒரு நாள் சாணம் பொறுக்குவதற்காக வந்த ஒரு இளம்பெண், அம்மன் புதைந்து போன இடத்தில் இருந்த சாணத்தை எடுத்து கூடையில் போட்டு அந்த சாணக் கூடையை தூக்க முயன்ற போது அவளால் கூடையை தூக்க முடியவில்லை. பின்பு அங்குள்ள பெரியவர்களை அழைத்து வந்தாள். அப்போது, அந்த இளம்பெணின் மூலமாக மாரியம்மனின் அருள்வாக்கு வர, அவ்விடத்தில் தான் சிலை வடிவமாக இருப்பதாகவும். “தன்னை வெளியில எடுத்து கோயில் அமைத்தால் உங்களுக்கு காவலாக நான் இருப்பேன்’’ என்று சொல்ல, மெய்சிலிர்த்த மக்கள் அந்த இடத்தை தோண்ட அம்மன் சிலை வெளிப்பட்டது. முதலில் கூரையாக வேய்ந்து அம்மனுக்கு கோயில் கட்டினர். அக்கம் பக்கமெல்லாம் புகழ் பரவிப் பெருக, பல மாற்றங்கள் கண்டு, பிரமாண்ட ஆலயமாக உயர்ந்தது. அன்று சாணக்கூடை சுமந்த பெண்ணின் வழி வந்த குடும்பத்தினர்தான்… இன்று கோயிலின் பரம்பரை அறங்காவலர், பூசாரி பதவிகளில் இருக்கிறார்கள்.

இரு நதிகள் சங்கமிக்கும் இருக்கன்குடி:

அர்ஜுனா ஆறு, வைப்பாறு இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக “இருகங்கைக்குடி‘ எனப்பட்ட இந்த ஊர் “இருக்க(ங்)ன்குடி‘ என மருவியது. இங்கு மாரியம்மன் அருள் புரிவதால் இந்த இடத்திற்கு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயர் வந்தது. இங்கு பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வருகிறார்கள்.

அர்ச்சுனா நதி:

இந்த கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்தில் தங்கி ஒய்வு எடுத்தார்கள். களைப்பு தீர குளிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் அங்கே நீர் நிலைகளை தேடி சுற்றி சுற்றி பார்த்தார் அர்ஜுனன். ஆனால் அவர் கண்களுக்கு எட்டும் தூரம்வரை நீர் நிலைகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இதனால் அர்ஜுனன், கங்காதேவியை நினைத்து வணங்கி ஒரு அம்பை மலையில் எய்தினார். உடனே அந்த இடத்தில் பீறிட்டு கிளம்பிய தண்ணீர் நதியாக உருவெடுத்தது. அந்த நதியில் பாண்டவர்கள் அனைவரும் நீராடினார்கள். அர்ஜுனன் நதியை உருவாக்கியதால் “அர்ஜுன ஆறு” என்று பெயர் பெற்றது

வைப்பாறு:

அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு ஆகும், இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் சம்புகன் என்ற வேடனால் அயோத்தியில் வாழ்ந்த ஒருவன் இறக்க நேரிட்டது. இதை அறிந்த ஸ்ரீராமர், வேடன் சம்புகனை கொன்றார். வேடனால் இறந்தவனை தன் சக்தியால் உயிர்ப்பித்தார் ஸ்ரீராமர். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது). இறந்தவனுக்கு மீண்டும் உயிர் தந்தாலும், வேடன் சம்புகனை கொன்றதால் ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்திதோஷம் பிடித்தது. அந்த பாவ விமோசனத்திற்காக சிவபெருமானை நினைத்து, வணங்கித் தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்கு தொடர்ச்சி மலை பக்கமாக வந்து சேர்ந்தபோது மாலைப் பொழுது ஆகிவிட, நீராடி, சிவவழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் வெளிப்பட்டது ஸ்ரீராமர், தண்ணீரைத் தேடினார். அப்போது ராமனுடன் வந்திருந்த சாம்பவன் என்பவர், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தையும் ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி(புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுனா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த இரு ஆறுகளும் கங்கை நதிக்கு இணையாக இருப்பதால் இந்த இடத்தில் அம்பாள் வீற்றிருக்க விரும்பினாள்.

ஸ்தல அமைப்பு:

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் 10 அடி உயரமுள்ள கல் கோட்டைக்குள் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முன்பகுதியில் உள்ள அம்மனின் சிலை உருவம் சிறப்பாக காட்சியளிக்கிறது. உட்பிரகார கோபுரம் அழகிய வேலைப்பாடுகளுடன் தங்க நிறத்தில் காட்சி அளிக்கின்றது. இக்கோயிலில் உள்ள மாரியம்மன் சிவ அம்சமாக திகழ்வதால் அம்மன் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ள மகாமண்டபத்தில் நந்திகேஸ்வரரும் அதற்கு அடுத்தாற்போல் கொடிமரமும் அமைந்திருப்பது கோயிலின் தனிச் சிறப்பு. கருவறையில் நுழைவாசலில் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டும். மாரியம்மன் பொன்னாபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறார் அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய்சிலிர்க்கின்றது. இக்கோயிலில் அம்மன் வலக்காலை மடித்து இடது காலை தொங்கவிட்டபடி சுகாசன கோலத்தில் அருள்பாலிக்கிறார் இந்த கோலத்தில் காட்சி தருவது மிகவும் விஷேசமாகும். கர்ப்பகிரகத்திற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் அன்னைக்கு வலதுபுறம் விநாயகர் அமர்ந்திருக்கிறார். மகா மண்டபத்தை அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதியை சுற்றிலும் பரிவார தேவதைகளாக சன்னதிக்கு பின்புறம் வடக்கு வாயில் செல்வி வெயிலுகந்தம்மன் உள்ளார், இவர்களுக்கு முன்பாக அரச மரத்தடியில் சித்தி விநாயகர் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார். அருகே வாழவந்தம்மனும் அதற்கு மேற்கே ராக்காச்சி அம்மனும் இருக்கின்றனர். வடமேற்குப் பகுதியில் பேச்சியம்மனும், முப்பிடாரி அம்மனும் தனித்தனி சன்னதியில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். அதற்கு கிழக்கே காத்தவராயனும், வயிரவமுர்த்தியும் எழுந்தருளியிருக்கின்றனர்.

தெற்கு பிரகார மண்டபத்தில் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய மாவிளக்கு மண்டபத்தின் உள்ளே உட்புற சுவர்களில் இத்திருத்தலத்தின் ஸ்தல வரலாறும், அன்னை பராசக்தியின் பற்பல அவதாரங்களில் திரு உருவப் படங்களும் வண்ணக் கலவைகளால் உயிர்பெற்று காட்சியளிக்கின்றன. மண்டபத்தின் மேற்கூரையில் அஷ்ட லட்சுமியின் திருவுருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. கோட்டைச் சுவருக்கு வெளியே தென்கிழக்குப் பகுதியில் காவல் தெய்வமாகிய கருப்பசாமிக்கு சன்னதி அமைந் துள்ளது திருக் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் வடக்குப் பார்த்தவாறு கையிருப்பு மஞ்சள் நீராட்டு அம்மன் கோவில் உள்ளது.

ஆதி அம்பிகை:

இப்போது கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பிகை சந்நிதி உள்ளது. இந்த இடத்தையும், ‘அம்மன் பிறந்த இடம்‘ என்று வழிபடுகிறார்கள். இங்கே அம்மனின் திருவுருவத்துக்கு பதில், அம்மன் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று அந்த சிலை ஊரில் உள்ள கோயிலில் இருந்து எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோயிலை அடைகிறது.

ஸ்தல தீர்த்தங்கள் :

வைப்பாறு, அர்ச்சுனா

ஆறுஸ்தலச் சிறப்பு :

பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனைத் ஸ்தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்” என்ற விரதத்தை அனுசரிக்-கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்மனின் அபிஷேக தீர்த்-தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். விவசாயிகள் இந்த அபிஷேக தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கரும்புத் தொட்டில் :

குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இருக்கன்குடி அம்மனிடம், குழந்தை பிறந்தால் கரும்பு தொட்டில் கட்டுவதாக வேண்டுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம்வந்து தங்களுடைய நேர்த்திகடனை நிறைவேற்றுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்பாளுக்குத் திருமுழுக்காட்டு, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மனுக்குப் புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடு கின்றனர். கூழ் வார்த்தும், பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி எடுத்தும், முடிகாணிக்கை செலுத்தியும், மாவிளக்கு ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆயிரங்கண் பானை எடுத்து வலம் வருதல், அங்கபிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.மற்றும் அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு விழாக்கள்:

இந்த கோவிலில் தமிழ் மாதங்களான ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இருக்கன்குடி அம்மனுக்கு ஆடி கடைசி வெள்ளி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று உற்சவர் கோயிலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருள்கிறார். இதேபோல தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் மக்கள் வெள்ளம் கூடும். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடி இருக்கன்குடி அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.

கோயிலுக்கு செல்லும் வழி:

விருதுநகரிலிருந்து 32 கி.மீ, சாத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது இருக்கன்குடி. இந்த ஊருக்கு சாத்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இரயில் பயணத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் சாத்தூர், விருதுநகர் போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக இருக்கன்குடிக்குச் செல்லலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

கோயில் காலை 5.30 மணி முதல் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும். இருள் நீக்கும் இருக்கன்குடி மாரியம்மனை நினைந்துருக, எண்ணிய நல்லெண்ணங்கள், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.