October 11, 2024

இரட்டை தலைமையும் இரண்டு அணியும்! அதிமுக எதிர்காலம் எங்கே போகும் பயணம்! தொண்டர்கள் புலம்பல்! காத்திருக்கும் சசிகலா!

அதிமுக உட்கட்சி தேர்தல் முடிவு கட்சியை பலப்படுத்துவதற்கு பயன்படுமா? அல்லது பலகீனப்படுத்தப் போகிறதா? என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், தலைவர்கள் மத்தியிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மற்ற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் அதிமுக தலைமை பதவியை தொண்டர்கள் மூலம் மட்டுமே நிரப்பப் படவேண்டும் என்று அந்த கட்சியின் சட்டதிட்ட விதி கூறகின்றது. அந்த விதியில் சில மாற்றங்களை செய்து ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் அதிமுக தலைமை பதவியை சமமாக (50/50) பகிர்ந்து கொண்டு தேர்தல் மூலம் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் தருவதுடன் அதிமுக தொண்டர்களுக்கும் தகவல்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

பொதுச்செயலாளர் பதவி சசிகலாவை நியமிக்க முயற்சி எடுத்தப் பொழுது அவருக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த ஒருவர் போட்டியிட விண்ணப்பம் படிவம் பெறுவதற்காக தலைமை கழகம் வந்தப்பொழுது சசிகலா ஆதரவாளர்கள் அடித்து விரட்டப்பட்டு காயப்படுத்தப்பட்டார். அதே போல் இப்பொழுதும் ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் எதிராக தேர்தலில் போட்டியிட விண்ணப்பப் படிவம் வாங்க வந்த ஒருவர் அடித்து விரட்டப்பட்டு விண்ணப்பம் படிவம் வழங்க மறுத்து அனுப்பிவைத்துள்ளார்கள். இதன் மூலம் ஒ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் செல்வாக்கை இரண்டாகப் பிரித்து (50/50) என்ற அடிப்படையில் கட்சியின் ஒருகிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்று விண்ணப்பம் செய்துள்ளார்கள். இதன் அடிப்படையில் இருவருக்கும் எதிராக மூன்றாவது நபர் ஒருவர் கூட விண்ணப்பம் செய்யவில்லை என்ற காரணத்தை கூறி ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் கட்சியின் தலைமை பதவியை நிர்வகிக்கும் பொறுப்பிற்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்கள்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சசிகலாவின் ஆலோசனைப்படி பலர் முயற்சித்தாலும் அத்தகைய முயற்சி எந்தவித பயனும் அளிக்கவில்லை. ஆக ஒரு கட்சி இரண்டு தலைமை இவர்கள் முடிவின் படி இனிவரும் காலங்களில் செயல்படும் என்பது உறுதி. இந்த தேர்வை எதிர்த்து நிதி மன்றத்தை நாடி இந்த தேர்தல் நடைமுறை செல்லாது என்று கூறி தடை ஆணை பெறுவதற்கும் தேர்தலை ரத்து செய்வதற்கும் ஒரு சிலர் முயற்சிக்க கூடும்.

அதே போல் சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை சிவில் நீதிமன்றத்தில் இருந்து வருவதால் அதை காரணம் காட்டி இந்த தேர்தல் நடைமுறை செல்லாது என்றும் அதை ரத்து செய்யவேண்டும் என்றும் சிலர் நீதிமன்றம் செல்லக் கூடும். மூன்றாவதாக தேர்தல் ஆணையத்தை அணுகி இறுதி முடிவு தெரியும் வரை இந்த இரட்டை தலைமை செயல்பாடுகளை முடக்கி வைக்கவேண்டும் என்று மனு அளிக்கப்படலாம். ஏற்கனவே கட்சியில் இருந்து நீட்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கிளைக் கழகம் முதல் ஒன்றியம், நகரம், ஊராட்சி, பேரூராட்சி, மாவட்டம் ஆகிய பதவிகளில் இருப்பவர்களும் இரண்டு அணியாகப் பிரிந்து ஒ.பன்னீர்செல்வம் அணி என்றும் எடப்பாடி பழனிசாமி அணி என்றும் பிளவுப்பட்டு அதிமுகவின் எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் அபாயம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் வாக்களித்து தேர்வு செய்தார்கள் என்று நாளை கேட்கக் கூடும். இவர்கள் இருவர் தான் கட்சி என்று நிலை உருவாகி விட்டதால் பொதுக் குழுவும், செயற்குழுவும் இவர்கள் தேர்தலை அங்கீகரித்துவிட்டால் எதிர்காலத்தில் சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் இல்லை என்பது பு00 சதவிகிதம் உறுதியாகிவிடும்.

அப்பொழுது சசிகலா என்ன செய்வார் என்ற கேள்வியும், கட்சியை காப்பாற்றுவதற்கும், கைப்பற்றுவதற்கும் எத்தகைய முயற்சிகளை எடுக்கப் போகிறார் என்பதை பார்ப்பதற்கும் ஆவலோடு காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள். இப்படி இருக்கலாம் சசிகலாவின் திட்டம் அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் உட்பட பலர் மீது குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு கைதாகி இவர்களெல்லாம் சிறைக்கு சென்றுவிடுவார்கள் அப்பொழுது மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலரது ஆதரவுகளை திரட்டி கட்சியை நாம் கைப்பற்றி கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் தலைவர்கள் பாடு கொண்டாட்டம். அதிமுக தொண்டர்களுக்கோ திண்டாட்டம். கட்சி இரண்டு அணியாக பிரிந்து விட்டது.

– டெல்லிகுருஜி