January 26, 2025

இதுதான் இன்றைய தமிழகம்!

[responsivevoice_button voice=”Tamil Male”]தமிழ்நாட்டுக்கு சீன அதிபர் ஜிங் பிங் வருகைக்கு பின் நம்ம ஊர் போலீஸ், பரபரப்போடும், படபடப்போடும் செயல் பட்டது நேற்றைய தினமாகத்தான் இருக்கும். அப்படி என்ன விஷேசம்? 43 நாட்களுக்கு பிறகு சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் ’திறப்பு விழா’ கண்டன.

என்ன அமர்க்களம்.?. என்ன ஆர்ப்பாட்டம்.? கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாலம் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களை வரவேற்று, அவர்கள் வரும் பாதையின் இரு மருங்கிலும் வாழை மரங்கள் நடப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்தது, அந்த மதுக்கடை. (அந்த கடை பின்னர் சீல் வைக்கப்பட்டது தனிக்கதை)

இதே கோவையில் உள்ள ஆவாரம்பாளையத்தில் காலை 8 மணிக்கெல்லாம் வந்திருந்து சரக்கு கடை முன்பு காத்திருந்தார்கள், இரண்டு ஸ்பெயின் நாட்டு பிரஜைகள்.

அவர்கள் தங்கி இருந்த ஸ்டார் ஓட்டலில் மது விநியோகம் செய்யப்படாததால், ‘தாகம்’’ தீர்க்க வந்திருந்த அந்த வெளிநாட்டு காரர்களுக்கு, (சரக்கு வாங்க) முதலிரண்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு, நமது விருந்தோம்பலை’’ வெளிப்படுத்தி இருந்தனர், டாஸ்மாக் ஊழியர்கள். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் டாஸ்மாக் கடையில் காலையிலேயே கூட்டம் அலை மோதியது.

இதனால் பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மது வாங்குவதற்கான டோக்கன்கள் கடை ஊழியர்களால் வழங்கப்பட்டது. கியூவில் நின்று குடிமகன்கள் டோக்கன் வாங்கி சென்றார்கள். அந்த கட்டிடம், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூடம். (ஒரு நாள் மட்டும் மதுக்கூடம்?) மாணவர்களுக்கு விடுமுறை தானே? கட்டிடம் சும்மா தானே இருக்கிறது என்ற எண்ணத்தில் பயன் படுத்தி இருக்கலாம். சமூக இடைவெளி? சாராயம் குடிக்கும் இடத்தில் அந்த பேச்சுக்கே இடம் இல்லை. நெருக்கி அடித்து, ஒருவர் மேல் விழுந்து, குவாட்டர் வாங்குவதற்குள் குடிமகன்கள் பட்டபாடு, கொஞ்ச நஞ்சமல்ல.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே அரசாங்கமும், உயர்நீதிமன்றமும் , மாவட்ட ஆட்சியரும் கறாராக பிறப்பித்த உத்தரவை ஏற்று, பெண் ஒருவர் ஆதார் அடையாள அட்டை, வண்ணக்குடை,முகக்கவசம் சகிதம் டாஸ்மாக் கடையில் காலையிலேயே ஆஜர். ‘லே ̄ஸ் பர்ஸ்ட்’’ என்ற ஆங்கில வாக்கியத்துக்கு கட்டப்பட்டு, அந்த பெண்ணை முதலில் சரக்கு வாங்க அனுமதித்தார்கள், ஆண்கள். எல்லாம் ஓ.கே. நேற்றைய சரக்கு விற்பனை எப்படி? 7 மணி நேரத்தில் சு0 லட்சம் லிட்டர் மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.மதிப்பு 170 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு விற்கப்படும் ஆவின் பால் கொள்ளவு எவ்வளவு தெரியுமா? 24 லட்சம் லிட்டர். இத்தனைக்கும், சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பல நூறு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. அவை மட்டும் திறந்திருந்தால்? – பி.எம்.எம்.