November 5, 2024

இணைய தளங்களால் தியேட்டர்களுக்கு அச்சுறுத்தல்..

[responsivevoice_button voice=”Tamil Male”]சினிமாவின் ஆரம்ப காலத்தில், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரே சாதனமாக விளங்கியது, தியேட்டர்கள் தான். 90களில் தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தபோது, தியேட்டர்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என ஆரூடம் கூறினார்கள். அதனை பொய்யாக்கி விட்டு, ‘ஒரு திரை’ மட்டும் இருந்த அரங்குகள் ‘மல்டி பிளக்ஸ்’ என பல திரைகளாக பரிணாம வளர்ச்சி பெற்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்-துள்ளது.

இந்த நிலையில் தான், ஓ.டி.டி. எனப்படும் இணையதளங்கள், திரையரங்குகளை ஆட்டம் காண வைத்துள்ளன.

ஊரடங்கு காலத்துக்கு முன்பு இந்த இணைய தளங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஓ.டி.டி.க்கு தயாரிப்பாளர்கள் படம் கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகி இரு மாதங்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில். வெளியிட அனுமதிக்க வேண்டும்’’ என்று திரை அரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் வலியுறுத்தினர். அதனை தயாரிப்பாளர்கள் காதில் போட்டுக்-கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டதால், அதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டன, ஓ.டி.டி.தளங்கள். ஊரடங்கின் ஆரம்பத்தின், விற்பனை ஆகாமல் தூங்கி கொண்டிருந்த சின்ன பட்ஜெட் படங்களை பெரிய விலை கொடுத்து வாங்கிய இணைய தளங்கள், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழலில் பெரிய பட்ஜெட் படங்களையும் வாங்க முற்பட்டுள்ளன. ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த புதிய வணிகம், தமிழ் திரை உலகிலும் வியாபித்து, தியேட்டர்களை ’காணாமல்’ போகச்செய்யும் ஆயத்தங்களை தொடங்கி விட்டது. பெரிய பட்ஜெட்டில் உருவான’’ பொன்மகள் வந்தாள்’’ படத்தை வாங்கிய “அமேசான் பிரைம்’’ இணைய தளம், இன்னும் சில பெரிய படங்களுக்கு வலை விரித்துள்ளது.

இந்த நிலையில் தான், தியேட்டர்களை விரைவில் திறக்கும் ஆரம்ப கட்ட வேலைகளை திரையரங்கு உரிமையாளர்கள், முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிப்பது, ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் திரையரங்கு மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வது,போன்ற விதிகளை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர். எப்படி இருந்தாலும் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர்களில் கூட்டத்தை எதிர் பார்க்க முடியாது. ரஜினியின் ‘அண்ணாத்தே’’ படம் பொங்கலுக்கு தள்ளிபோகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் வெளிவரும் பெரிய படமான விஜயின் ‘மாஸ்டர்’.

தான் , திரையரங்குகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதாக இருக்கும். ஒரு முன்னோட்டமாக தீபாவளிக்கு முன் சுமார் 30 சின்ன பட்ஜெட் திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக அந்த படங்களின் ரிசல்ட் தியேட்டர்களின் “நாடித்துடிப்பை” “ஓரளவு தெரிந்து கொள்ள உதவும். – பாபா