சொந்த பணி காரணமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2 முறை ஆஜராக முடியவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அ.தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
இதன் பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்தி வந்தோம். அப்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கான ஆட்சியாக இந்தியாவின் முன்மாதிரியான அரசாக அ.தி.மு.க. செயல்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு மக்கள் நலன்களை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி தி.மு.க. வேட்பாளர்கள், பேச்சாளர்கள், கட்சியினர் நாடகம் நடத்தி வெற்றி பெற்று, தற்போது மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செய்யாமல் குறிப்பாக நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைப்போம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
எனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு கிடையாது. நான் டெல்லிக்கு சென்றது மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்பதற்காகத்தான்.
அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். சசிகலாவால் ஒருபோதும் இக்கட்சியை கைப்பற்ற முடியாது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எனது சொந்த பணி காரணமாக 2 முறை ஆஜர் ஆக முடியவில்லை. விசாரணை தொடங்கிய பின்பு முதல் ஆளாக நானே செல்வேன்.
More Stories
தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை