October 11, 2024

அகில இந்திய அரசியல் நிலவரம் பாஜக கட்சிக்கு வெற்றியை தருமா…! சரிவு ஏற்படுமா…!

அகில இந்திய அரசியல் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை கடந்த வாரம் டெல்லியில் இருந்து நேரடி தகவல்களை சேகரித்து அக்னிமலர் குழுவினர் வழங்கிய தகவல்கள் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்..!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவு, புதிய குடியரசு தேர்தல் மற்றும் புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தல், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களுக்கு பிரிவு உபச்சார விருந்து நிகழ்வு, இதற்கிடையில் பீகார் அரசியலில் காட்சி மாற்றம் என்று டெல்லி தலைநகர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சர் அலுவலகம் மற்றும் மத்திய அமைச்சர்கள் இல்லங்கள், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பட்ஜெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வழங்கி புதுச்சேரிக்கு திரும்பியுள்ளார். குறிப்பாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்புக்கு இடையில் அமைதிக் காத்து மௌனப்புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

பீகார் முதல்வர் நித்திஷ்குமாருடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அவர்களும், ராகுல்காந்தி அவர்களும், பீகாரில் ஆட்சி மாற்றத்திற்கும் கூட்டணி மாற்றத்திற்கும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பது பாஜக கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வட மாநிலங்களில் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் சரிவு ஏற்படும் என்று டெல்லியில் நிகழும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இதற்கு ஆதரமாகவும், சாட்சியாகவும் இருப்பது பீகாரில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம். குறிப்பாக உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் இந்த மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி நூற்றுக் நூறு என்ற வெற்றி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இது கடந்த கால வரலாறு. மீண்டும் பிரதமராக மோடி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதும் இந்த மூன்று மாநிலத்தில் பாஜக கட்சிக்கு கிடைத்த அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையே காரணமாக இருந்தது. அந்த வகையில் தற்பொழுது பீகார் மாநிலம் பாஜக கட்சிக்கு எதிரான நிலையில் எடுத்துள்ளது. இது பாஜக கட்சிக்கு ஏற்பட போகும் தோல்விக்கு அடித்தளமாகவும், அமைந்துள்ள என்றே கூறலாம்.
]

பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு நிலையை எதிர்பார்த்த சிறுபான்மை மக்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான நிலையை எடுத்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்திகையை உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம் புதுடெல்லி, மேற்குவங்காளம், அசாம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, போன்ற மாநிலங்கள், தற்பொழுதே அதற்கான முன்னேற்ற ஏற்பாடுகளை செய்வதற்கான முனைப்பை செய்து வருகிறார்கள். இதன் மூலம் அகில இந்திய அளவில் பாஜக அதன் தோழமை கட்சிகள் கடந்த காலத்தில் பெற்ற வெற்றியை விட சுமார் பு00 தொகுதிகளை வடமாநிலங்களில் இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமிர்ஷா அவர்களும் இந்தியாவின் வாக்காளர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை பிரபலப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இத்தகைய முயற்சியை பல்வேறு மாநில கட்சிகள் ஏற்க மறுத்து தங்களுடைய அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதனால் பாஜக கட்சியின் வாக்கு வங்கியில் பல மாநிலங்களில் சரிவை சந்திக்க வேண்டிய நிலை உருவாகலாம். குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்துக் கொண்டு அந்த கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளும் சட்ட ரீதியாக மேற்கொண்டு வருவது அந்த கட்சியினரை அச்சுறுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது.

இதைப்பயன்படுத்திக் கொண்டு திமுக ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவையும் பயன்படுத்திக் கொண்டு முழு வெற்றியையும் சுலபமாக அடைந்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது. இதற்கு ஏற்றாற்போல் மத்திய அரசு அதிமுக எடப்பாடி அணிக்கு பல்வேறு பிரச்சனைகளை -ஏற்படுத்துவதுடன் தேர்தல் ஆணையத்தின் மூலம் எங்கே தங்களுக்கு நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சத்துடனும், இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு எடப்பாடி பழனிசாமி ஆளாகியுள்ளார். இருந்தாலும் அதிமுக நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும், எடப்பாடி பின்னால் இருப்பதினால் அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் திமுகவின் எதிர்ப்பையும் தாண்டி மத்திய அரசின் நெருக்கடியும் கடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக அணியை எதிர்த்து அதிக இடங்களில் வெற்றிப்பெறலாம் என்று கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அகில இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கூட்டணி அமைத்து காங்கிரசை முன்னிலைப்படுத்தி எவ்வாறு வெற்றிப் பெறுவது என்கின்ற ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பல வடமாநில கட்சிகள், தென்மாநில கட்சிகள் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட திட்டமிடுகிறார்கள். குறிப்பாக மம்தா பேனர்ஜி, சரத்பவார், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அகிலேஷ்யாதவ் போன்றோர் காங்கிரசை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை என்பதால் பாஜக கட்சி அத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் நமது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டு அரசியல் விளையாட்டை தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக வடமாநிலங்களில் ஏற்படும் சரிவை ஈடுகட்டுவதற்கு தென்மாநிலங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு இந்த 5 மாநிலங்களில் கூட்டணி மூலமோ அல்லது எதிர் அணிகள் மூலமாகவோ 70க்கும் மேற்பட்ட இடங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் முயற்சியில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி அமிர்ஷா கூட்டணி. இதில் கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜக கட்சியில் எதிர்பார்ப்புகள் ஓரளவு பலன் அளித்தாலும் மற்ற மாநிலங்களில் மிக குறைந்த அளவே வாய்ப்புகள் உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

ஆக மொத்தத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் (2024) அகில இந்திய அளவில் பாஜக கட்சிக்கு ஒரு மிகப் பெரும் சவாலாகவும் அதிக நெருக்கடியும், ஏறப்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை நிலையாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை கைக்கு கை கொடுக்குமா? அல்லது தாமரைக்கு வாய்ப்பு அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போம்.

அக்னிமலர் குழுவுடன்
டெல்லிகுருஜி