December 3, 2024

ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்வு- வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதி கொள்கை குழு சீராய்வு கூட்டத்தை நடத்தி வட்டி விகிதம், உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நிதி கொள்கைக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கபட்டது. இதில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் வட்டி உயர்த்தப்படுகிறது. உலக அளவில் நிச்சயமற்ற பொருளாதார நிலை நிலவி வருகிறது. உணவு பற்றாக்குறை, எரி பொருட்களின் விலை உயர்வு பாதிப்படைய செய்கிறது. நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும். இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகிறது. இருண்ட உலகத்தில் இருந்து பிரகாசமான இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளதை பார்க்க முடிகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்து உள்ளது. உலகளவில் மிக வேகமாக இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டு உள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான தவணை தொகை அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. வாடிக்கையாளரின் டெபாசிட் தொகைக்கான வட்டியும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.