திருச்சி: இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அதன் மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு ரெயில்வே, சுங்கத்துறை, கலால் துறை, விமானத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறை சார்ந்த 129 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். அதன்படி கடந்த அக்டோபர் 22-ந்தேதி 75 ஆயிரம் பேருக்கும், அதன் பின்னர் நவம்பர் 22-ந்தேதி 71 ஆயிரம் பேருக்கும் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இன்றைய தினம் மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் ஒன்றரை லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் முகாமையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தற்போது புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். 2047-ல் நாடு மிகப்பெரிய வல்லரசாக திகழவும், சுய சார்புடன் இருக்கவும் இந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…