May 24, 2022

amni

தாயம்மா வீட்டு வேலைகளை முடித்து விட்டு தன் வீட்டை நோக்கி கிளம்ப ஆயத்தமானாள். அவளிடம் சொல்லி அந்த இடும்பன் சோலை கிராமத்து மக்களை தங்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு, மேடான இடத்துக்கு போகச் சொல்லி விடலாமா. சுந்தரத்தால் முடிவு செய்ய முடியவில்லை. அதற்குள் தாயம்மா கிளம்பி விட்டாள். அவள் ஜீப் போகும் பாதையில் போவதில்லை. ஏதோ குறுக்கு வழியில், மலைச் சரிவில் இறங்கி வேகமாய் தன் குடிசைக்கு போய் விடுவாள். தாயம்மா கிளம்பி போன பிறகு, சுந்தரத்தின் பயமும் குற்ற உணர்ச்சியும் அதிகமாகியது. மழை நிற்கவில்லை. அதிகமாகிக் கொண்டே வந்தது. சூரியன் மேற்கில் இறங்க ஆரம்பித்தது. வெள்ளம் தடுப்பு அணையின் மேல் மட்டத்தை எட்டிவிட்டதை அவரது வீட்டில் இருந்து அவரால் பார்க்க முடிந்தது. தடுப்பு அணை உடைந்து விடும் என்று தோன்றியது. கிராம மக்களை கூட்டி வந்து தடுப்பு அணையின் உயரத்தை மணல் மூட்டைகளைக் கொண்டு அதிகப்படுத்தலாமா என்று நினைத்த அவர், வீட்டை விட்டு இறங்கி மணல் மூட்டைகள் இருந்த குடோனுக்கு மழையில் நனைந்து கொண்டே ஓடினார்.. அங்கும் ஏமாற்றம்தான். அந்த மணல் மூட்டைகள் கிழிந்து இருந்தன. எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. குறைந்த பட்சம், தாயம்மாவிடம் சொல்லி அந்த கிராமத்து மக்களை வரச்சொல்லி, அவர்களைக் கொண்டு, மணல் மூட்டைகளை தயாரித்து, தடுப்பு அணையின் உயரத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.
அதையும் செய்யாமல் விட்டுவிட்டேனே. இப்போது அவர் முடிவு செய்து விட்டார். அந்த அபாய அறிவிப்பு கொடுத்தே ஆக வேண்டும். தானே நேரில் இடும்பன் சோலை கிராமத்திற்கு போய் அவர்களிடம் கிராமத்தை காலி செய்து கொண்டு மேடான இடத்திற்கு போகுமாறு சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். மேலதிகாரிகளின் பர்மிஷனுக்காக காத்திருக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்த சுந்தரம், அலமாரியைத் திறந்து மழைக் கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு, ஜீப்பின் சாவியை எடுத்துக் கொண்டு ஜீப்பை நோக்கி வேகமாக நடந்து அதை ஸ்டார்ட் செய்தார். ஜீப் ஸ்டார்ட் செய்யப்படும் சத்தம் கேட்டு, வீட்டிற்கு உள்ளே இருந்து ஓடிவந்த தன் மனைவியிடம், “சுசீலா.. நான் இடும்பன் சோலை கிராமத்துக்கு போய் இந்த மழை வெள்ளத்தை பத்தி சொல்லி, ஜாக்கிரதையா இருக்கச் சொல்லிட்டு வர்ரேன்..” என்றார். “இந்த மழையில நீங்க போறீங்களா..” என்றாள் அவள் பயத்துடன். “அவங்களுக்கு பெரிய ஆபத்து வரப் போவுது.. இந்த மழைக்கு நான் பயந்தா, அவங்க உயிரு..” என்று சொல்லி விட்டு சுசீலாவின் பதிலுக்கு காத்திராமல், இடும்பன் சோலை கிராமத்தை நோக்கி ஜீப்பை விட்டார் சுந்தரம். ஜீப் மட்டும் போய் வருவதற்காக போடப்பட்ட அகலம் குறைவான மண் பாதை அது. பேய் மழை பெய்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு இருந்தது.பாதையில் கற்கள் விழுந்து கிடந்தன.
ஜீப் போக சிரமமாக இருந்தது. சிரமப்பட்டு கொஞ்ச தூரம் ஜீப்பை செலுத்தினார். அடக்கடவுளே. ஒரு பெரிய மண் சரிவு. மொத்தமாய் பாதையை அடைத்து இருந்தது. ஜீப் கண்டிப்பாக மேலே போக முடியாது என்பது தெரிந்தது. என்ன செய்வது என்று யோசித்து, ஜீப்பை அங்கேயே விட்டு விட்டு, நடந்தே இடும்பன் சோலை கிராமத்திற்கு போக முடிவு செய்தார். மழைக் கோட்டுடன் சேர்த்து இருந்த தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு நடந்தார்.. நேரம் ஆக ஆக மழை அதிகமாகிக் கொண்டு வந்தது. முழுவதுமாக இருட்டி விட்டது. கும்மிருட்டு. கண்களினால் எதையும் பார்க்க முடியவில்லை. இடும்பன் சோலை கிராமத்தை அவரால் காண முடியவில்லை. கால்கள் தடுமாறின.. வழி எது என்பது தெரியவில்லை. திரும்பவும் ஜீப்பிற்கு போய்விட்டால் போதும் என்று இருந்தது. கஷ்டப் பட்டு திரும்பி நடந்து, ஜீப்பில் போய் உட்கார்ந்து கொண்டார். மழை அதிகமாகிக் கொண்டே வந்தது. தடுப்பு அணை எப்படியும் உடைந்து விடும் என்று தோன்றியது. கிராமத்தின் தாழ்வான பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டு விடும் என்று மனதில் உறுதியாக தோன்றியது. குளிர் காற்று அடித்தது. உடம்பு பூராவும்
நடுங்கியது அவருக்கு. வீட்டிற்கு திரும்பி போய்விடலாம் என்று முடிவு செய்து ஜீப்பை ரிவர்ஸ் எடுக்கலாம் என்று பார்த்தார். அதுவும் ரிஸ்க் என்று தோன்றியது. இருட்டில் ரிவர்ஸ் எடுக்கும் போது, மண் சரிவில் ஜீப் விழுந்து விடுமோ என்று பயம் வந்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது. தான் திரும்பி வீட்டிற்கு போக வில்லை என்றால் சுசிலா பயந்து விடுவாள் என்பதும் புரிந்தது. ஆனால் என்ன செய்வது.வேறு வழியில்லை. ஜீப்பிலேயே உட்காரவேண்டியது தான். யோசித்துக் கொண்டே அப்படியே இரவு பூராவும் தூங்காமல் விழித்துக் கொண்டுஜீப்பில் உட்கார்ந்து கொண்டு இருந்தார் சுந்தரம். கைக்கடிகாரம் மழையில் நனைந்து, நின்று போயிருந்தது. எவ்வளவு நேரம் போயிருக்கும் என்று அவரால் கணக்கு போடமுடியவில்லை.. கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து வருவதை, உறங்கிக்கொண்டிருந்த கிராமத்து வாசிகள் உடனடியாக உணர்ந்து, குழந்தைகளை எடுத்துக் கொண்டு மேடான இடத்திற்கு ஓடிப்போய் இருப்பார்களா? ஆடு மாடுகளை அவிழ்த்து விட்டு இருப்பார்களா. சேர்த்து வைத்திருந்த நெல் மற்றும் தானியங்களை காப்பாற்றி இருப்பார்களா? குடிசைகளும், பொருட்களும் போனாலும் பரவாயில்லை என்று தங்கள் உயிர்களையாவது காப்பாற்றிக் கொண்டு இருப்பார்களா? அல்லது ஏதாவது உயிர்கள் போயிருக்குமா…? முழுவதும் வெளிச்சம் வந்தவுடன், கிராமத்தின்
நிலைமையை பார்க்க வேண்டும் என்று காத்து இருந்தார் சுந்தரம். சூரிய வெளிச்சம் வருவது தெரிந்தது. மழையும் நின்றது. சூரிய வெளிச்சம் வர வர அவர் மனம் அடித்துக் கொண்டது. மேலேயும் கீழேயும் பார்த்தார். அவர் பயந்தபடி இரவில் தடுப்பு அணை ஏற்கனவே உடைந்து, வெள்ளம் அடித்து ஓய்ந்து இருந்த தடயம் தெரிந்தது. ஜீப்பில் இருந்த பைனாக்குலரை எடுத்து கிராமத்தை நோக்கி கீழே பார்க்க, அந்த கோரமான காட்சி அவர் மனதை பிழிந்தது. தாழ்வான பகுதியில் இருந்த குடிசைகள் அடித்து செல்லப் பட்டு இருந்தன.அவர்கள் வளர்க்கும் ஆடு மாடுகள் செத்துக் கிடந்தன.. இந்த சேதங்கள் மட்டும் தானா…. ஏதாவது மனித உயிர் சேதம் ஏற்பட்டு இருக்குமா.. ஐயோ.. என் வாழ்நாளில் இப்படி ஒரு குற்றம் செய்து விட்டேனே…எனக்கு மன்னிப்பு உண்டா.. தாங்க முடியாத சோகத்திலும் குற்ற உணர்விலும் அவர் மனம் தத்தளித்தது… நேற்று புதிதாய் பிறந்த அந்த இரண்டு குழந்தைகள்… அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு, அந்த இரண்டுக்கும் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்களே… இந்த கோர வெள்ளத்தில் அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிர் பிழைத்திருக்குமா….. அதற்குள் நன்றாக விடிந்து விட்டிருந்தது.சுந்தரம் சுற்றிலும் பார்த்தார். இடும்பன் சோலை கிராமத்திற்கு போக பயமாய் இருந்தது சுந்தரத்திற்கு.
தான் கட்டி வரும் அணைக்கட்டு உடைந்ததினால் தான் இந்த விபத்து என்று தெரிந்தால் தன்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு வர, பயம் தொற்றிக் கொண்டது. ஜீப்பை ரிவர்ஸ் எடுத்து தடுப்பு அணையை நோக்கி செலுத்தினார். அவர் எதிர்பார்த்த படி அது உடைந்து போய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து விட்டார். பிறகு சுசிலாவை பற்றி ஞாபகம் வர, ஜீப்பை தன் வீட்டை நோக்கிச் செலுத்தினார். வாசலில் சுசீலா உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. அவரைப் பார்த்ததும், அவளுக்கு அழுகை பீறிட்டு வர, “ராத்திரி பூராவும் வரலையேன்னு பயந்து போயிட்டேன்..” என்றாள் அவள். தன் மனைவி சுசீலாவிடம் தான் கட்டி வரும் தடுப்பு அணை உடைந்து போனது, வெள்ளத்தில் கிராமம் அடித்துக் கொண்டு போனது பற்றி சொன்னார். சுசீலாவின் முகம் பேயறைந்தது போல் மாறி விட்டது. “தாயம்மா பொழைச்சு இருப்பாளா..” சுசீலா கேட்க, என்ன பதில் சொல்வது என்று அவருக்கு தெரிய வில்லை. கொஞ்ச நேரம் கழித்து, திடீரென்று நினைவு வந்தவளாய், “ஏங்க.. அந்த ரெண்டு குழந்தைங்க…” சுசீலா பயந்து போய் கேட்டாள். சுந்தரம் பதில் சொல்லவில்லை. இருவரும் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து இருந்தார்கள். “நீங்க கிராமத்துக்கு போய் பாத்துட்டு
வர்ரீங்களா..” “அதுல ஒரு சிக்கல் இருக்கு சுசீலா.. நான் தான் இதுக்கு காரணம்னு அந்த கிராமத்து ஜனங்க நெனச்சிட்டா.. என்ன செய்யறது..” “அப்படின்னா போக வேண்டாங்க.. ஐயோ.. பயமா இருக்குங்க.. வீட்டை காலி பண்ணிட்டு ரெண்டு பேரும் சென்னைக்கு போயிடலாங்க…” “எனக்கும் பயமா தான் இருக்குது.. சென்னைக்கு போயிடலாம்னு தோணுது.. அதே சமயத்தில, கிராமத்து ஜனங்களுக்கு என்ன ஆயிருக்குன்னு தெரிஞ்சிக்காம, நாம ஓடிப் போகக் கூடாது. அவங்கள பாத்து, அவங்களுக்கான உதவியை உடனே நாம செய்யணும்.. தங்களுக்கு வந்த
சேதத்திற்கு நான் தான் காரணம்னு அவங்க சொல்றாங்களான்னு முதல்ல தெரிஞ்சிக்கலாம்.. நான் காரணம்னு அவங்க சொல்லலேன்னா, நமக்கு எந்த பயமும் இல்லை..” “இப்ப நாம என்ன செய்யறது…” . “தாயம்மா பொழச்சு இருந்தா, நம்ம வீட்டுக்கு வருவா..வந்து என்னா நடந்திச்சுன்னு சொல்லிடுவா..” தாய்ம்மாவை எதிர்பார்த்து இருவரும் வாசலில் வந்து உட்கார்ந்தனர். பயத்திலும், குற்ற உணர்விலும் இருவருக்கும் முகம் வெளிறிப் போய் இருந்தது. மணி பத்து ஆகியிருக்கும்.
அவர்கள் எதிர்பார்த்த படி தாயம்மா வந்தாள். அவள் முகம் சோகத்தில் வாடி இருந்தது தெரிந்தது. ஏதோ சொல்ல வேண்டும் என்று அவள் யத்தனிப்பது புரிந்தது. முதலில் தான் பேசக் கூடாது என்றும், தடுப்பு அணை உடைந்ததைப் பற்றி சொல்லி விடக் கூடாது என்றும் மனதில் நினைத்துக் கொண்டார் சுந்தரம். “ராத்திரி பூராவும் பேய் மழை அடிச்சுதே..” என்று தாயம்மாவிடம் கேட்டார் சுந்தரம். “ஆத்துல திடீர்னு வெள்ளம் வந்து எங்க குடிசைங்க எல்லாம் அடிச்சிக் கிட்டு போயிடிச்சி..” என்றாள் தாயம்மாகண்களில் நீர் மல்க. அந்த விஷயம் தங்களுக்கு தெரியாதது போல, “ஐயோ.. அப்படியா.. என்ன ஆச்சு..” என்று சுந்தரமும், சுசீலாவும் ஒன்றாய்க் கேட்டார்கள். “எங்க வீட்டுக்கார ஆளு தான் முதல்ல வெள்ளம் வர்ரதை பாத்தாராம்…” தாயம்மா. “கந்தனா..” சுந்தரம் கேட்டார்.
“ஆமாம்.. நடு ராத்திரியில வெள்ளம் வர்ர சத்தம் அவருக்கு கேட்டுச்சாம்..” “மத்தவங்களை எழுப்பி காப்பாத்தி வுட்டாரா..” “ஆமாம்.. வெள்ளம் வருதுன்னு தெரிஞ்சவுடனே பெரிசா ஒரு சத்தம் போட்டாரு.. ஒவ்வொருத்தரையா எழுப்பி மேட்டுக்கு கொண்டு போனாரு.. மத்த ஆம்பிளைங்களும் சேர்ந்து கிட்டாங்க.. வயசானவங்களை தூக்கிக் கிட்டு போனாரு.. ஒரு உசுரு இல்லாம எல்லாத்தையும் காப்பாத்திட்டாரு..” “ஆடு, மாடுங்க.. தானியங்க என்ன ஆச்சு..” இதைக் கேட்டதும் தாயம்மாவுக்கு அழுகை வந்தது. “ஆடு மாடுங்களை அவுத்து வுடறதுக்குள்ள வெள்ளம் அடிச்சிக்கிட்டு போயிடிச்சு..” “தானியங்க..” “அதுவும் வெள்ளத்தில போயிடிச்சி..” தாயம்மா அழுது கொண்டிருந்தாள். மேலும் எதுவும் கேட்க அவரால் முடியவில்லை. பேசாமல் இருந்தார். மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டு விட்டன என்பது சுந்தரத்திற்கு சற்று ஆறுதல் அளித்தாலும், குடிசைகள் அடித்துச் செல்லப் பட்டு விட்டதும், ஆடு மாடுகள் இறந்து போய் விட்டதும், தானியங்கள் வெள்ளத்தில் போய் விட்டதும் தாங்க முடியாத மன வலியை கொடுத்தது அவருக்கு. அந்த குழந்தைகளைப் பற்றிய ஞாபகம் சுசீலாவுக்கு வர, “தாயம்மா.. நேத்து பொறந்த குழந்தைங்க..” என்று பதறிப் போய் கேட்டாள் சுசீலா. “அதுங்களுக்கு எதும் ஆகலியே..” சுந்தரமும் சேர்ந்து கொண்டு பதைபதைப்புடன் கேட்டார். “அதுங்களும் பொழைச்சிகிடிச்சி.. ஆனா அந்த குழந்தைங்களைப் பத்தி தப்பா பேசறாங்க.. வெள்ளம் வந்து இப்படி எங்க குடிசைங்க அழிஞ்சி போனதுக்கு, அந்த இரண்டு குழந்தைங்க தான் காரணமாம்..” “அந்த குழந்தைங்க காரணமா.. என்ன அநியாயம்.. யாரு சொன்னாங்க அப்படி..” சுந்தரம் கோபமாய்க் கேட்டார். சுசீலாவும் அதிர்ந்து போயிருந்தாள் தாயம்மாவின் பேச்சைக் கேட்டு. “எம் புருஷன் தான் முதல்ல அப்படி சொன்னாரு.. அப்புறம் மத்த ஆம்பிளைங்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க..அந்த ரெண்டு குழந்தைங்களும் சூனியக்கார குழந்தைகளாம்.. அதுங்க பொறந்த வுடனே எங்க கிராமம் இப்படி அழிந்து போச்சாம்.. அதுங்க பொறந்த நேரம் சரியில்லையாம்.” & தொடரும்