November 2, 2024

8-ந்தேதி சந்திரகிரகணம்: பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின்போது பழனி மற்றும் அதன் உப கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 8-ந்தேதி மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் பெரியாவுடையார் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.