October 11, 2024

18-வது சுனாமி நினைவு தினம்: சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி

சென்னை:

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை புரட்டிப்போட்டது.

இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென வந்த ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது. இதில் 14 நாடுகளிலும் சேர்த்து 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி சுனாமியால் உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் இன்னமும் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழக கடலோர பகுதிகள் முழுவதிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலும் கடற்கரை ஓரங்களில் சுனாமி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றப்பட்டது.

சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குமரி மாவட்டத்தில் நினைவு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.