October 11, 2024

10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் ஷூ, பெல்ட் அணிய தடை- கட்டுப்பாடுகளை பின்பற்ற கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு


சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5ந்தேதி தொடங்கப்பட உள்ளது. 10ம் வகுப்புகளுக்கு மே 6ந் தேதியிலும், 11ம் வகுப்புகளுக்கு மே 10ந் தேதியும் தேர்வுகள் நடை பெற உள்ளன.

கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு இந்த வருடம் முழுமையாக நடத்த பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார். தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் கண்காணிப்புகள் குறித்து கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி அந்த கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு கூடத்திற்கு மாணவ-மாணவிகள் எவ்வாறு வர வேண்டும், விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் செல்போனை தேர்வு மைத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.

மேலும் ஷூ, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணிந்து வந்தால் கூட தேர்வு அறைக்கு வெளியே கழற்றி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதக் கூடிய மாணவ-மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு மையங்களில் சிலர் துண்டு சீட்டு வைத்து காப்பி அடிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கு 177 மையங்களும், பிளஸ்-1 தேர்வுக்கு 177 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு 227 மையங்கள் செயல்படுகின்றன.

பொதுத் தேர்விற்கான ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர 10 அறைக்கு ஒரு நிலை பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு தேர்வினை தலா 47 ஆயிரம் மாணவ-மாணவிகள் வீதம் எழுத உள்ளனர்.