April 25, 2024

மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் பற்றி மத்திய வல்லுனர் குழு ஆய்வு

சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் நினைவிடத்தின் முகப்பு அமைகிறது. நினைவிடத்தின் பின்புறம் 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் பாலத்தில் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ரூ.80 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 134 அடி உயரத்துக்கு இந்த பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவுகள் பெறப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள மாநில அளவில் அனுமதி வழங்கினால் மட்டும் போதாது என்பதால் மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்க மாநில ஆணையம் பரிந்துரைத்தது.

இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், சூழலியல் அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசர கால செயல் திட்டம் போன்றவற்றை தயார் செய்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி அதன் பிறகு மத்திய அரசிடம் விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கடலோர ஒழுங்கு முறை மண்டல மேலாண்மை ஆணைய வல்லுனர்கள் அடங்கிய மதிப்பீட்டு குழு கூட்டம் ‘ஆன்லைன்’ வாயிலாக நேற்று நடந்தது. இதில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பம் ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது 14 பேர் அடங்கிய வல்லுனர் குழு இந்த திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்தது. இந்த குழு விரைவில் பரிந்துரை அளிக்க உள்ளது. நிபந்தனைகளை விதித்து இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய ஆணையம் முடிவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆரம்ப கட்ட அனுமதிகள் கிடைத்து விடும் என தெரிகிறது.