April 25, 2024

பதவிக்காக நிலைப்பாட்டை மாறுவதே நிதிஷ்குமாரின் கொள்கை: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா: பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையினால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் லாலுவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த பின்னர் முதல்முறையாக அமித்ஷா பீகாரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறுனியா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா; சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகளில் வென்ற போதும் பிரதமர் உறுதியளித்தது படி நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதாக குறிப்பிட்டார். ஆனால் பதவி மீது உள்ள மோகம் காரணமாக நிதிஷ் குமார் பாஜக மற்றும் பீகார் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக அமித்ஷா சாடினார்.

பதவிக்காக தமது நிலைப்பாட்டை மாற்றுவது மட்டுமே கொள்கையாக கொண்ட நிதிஷ்குமாரிடம் லாலு பிரசாத் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் பீகாரில் தாமரை மட்டுமே மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமித்ஷாவின் பேச்சு நகைப்பை ஏற்படுத்துவதாக அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் உறுதியளித்தப்படி சிறப்பு அந்தஸ்து மற்றும் பொருளாதார உதவிகளை வழங்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.