April 25, 2024

ஊழியர்கள் அலுவலகத்திற்கே வரவேண்டிய அவசியம் இல்லை: அமெரிக்க நிறுவனம் அதிரடி அறிவிப்பு


கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அனுமதித்தன. ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலம் நடத்தின.

இதனால் அலுவலக பராமரிப்பு, மின்சாரம் போன்ற செலவுகள் அலுவலகத்திற்கு மிச்சமாகின. சில நிறுவனங்கள் இதுவரை ஊழியர்களை அலுவலத்திற்கு அழைக்காமல் உள்ளது.

இந்த நிலையில் கணக்குகளை பராமரிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் அமெரிக்க நிறுவனம் பி.டபிள்யூ.சி. (PwC) இனிமேல் ஊழியர் வேலைப்பார்ப்பதற்காக அலுவலகம் வரவேண்டாம், வீட்டில் இருந்தே பணிபுரியலாம் எனத் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்ட அந்த நிறுவனம், அவர்களுக்கான வேலைகளை வீட்டில் இருந்தே பார்க்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை அணுக வேண்ட நிலை ஏற்பட்டால் அல்லது சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அதற்கு உதவி செய்வோம் எனத் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் மீட்டிங் மற்றும் வாடிக்கையாளர்கள் வருகை போன்றவற்றால் மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் அலுவலத்திற்கு வர வேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஊழியர்கள் வசிக்கும் இடங்களை பொறுத்து அவர்களின் சம்பளம் சற்று குறைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.