April 25, 2024

வேண்டும் விடுதலை!

கடந்த நான்கு மாதங்களாக கொரனா பரவலின் தாக்கத்தை சமாளிப்பதற்கு அரசாங்கம் அறிவித்த முழு ஊரடங்கை கடைப்பிடிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் உயிரை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்று போராடுகிறர்கள். இன்னொரு பக்கம் பொருளாதாரத்தை இழந்து விட்டு புதிய பொருளாதாரத்தை எப்படி
தேடுவது என்று தவிக்கிறார்கள். இந்த நிலையில் வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்களும் வேலையை இழந்து தவிப்பவர்களும் தங்கள் எதிர்கால நிலையை நினைத்து அச்சமுடன் வாழ்கிறார்கள்.

கல்வி சாலைகள், கல்லூரிகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற அறிவிப்பு முழுமையாக தெரிந்துக் கொள்ள முடியாமல் மாணவ, மாணவிகள் வீட்டுக்குள் அடங்கி கிடக்கிறார்கள். இதற்கு இடையில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு ஏற்ற வசதியை எல்லா மாணவ மாணவியரும் பெற்றிருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதில் அதிகளவில் கிடைக்கிறது. தமிழ்நாடு அரசோ தொலைக்காட்சி மூலம் கல்வி கற்கலாம் என்று அதற்கான திட்டத்தை வகுத்து செயல்பட தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கொரனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லாமல் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல்வேறு விதமான தளர்வுகளுடன் பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் முழுமையான விலக்கு அறிவிக்கப்படும் வரை பொதுமக்கள் இல்லங்களிலேயே முடங்கிக் கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தவம் இருக்க வேண்டும் என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.

ஒவ்வொரு நாளும் காலையில், மாலையில், இரவில் தொலைக்காட்சி பெட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிரந்தர விளக்கு அளிக்கும் ஊரடங்கு விலகல் அறிவிப்பை அரசு எப்பொழுது அறிவிக்கும் என்று காத்து கொண்டிருக்கிறார்கள். வரும் ஜூலை 3பு&ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் பு முதல் விளக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. ஊரடங்கால் கடுமையான இழப்புகளை சந்தித்த தொழிற்சாலைகளும் தொழில் முனைவோர்களும் மீண்டும் எழுந்து நிற்பதற்கு ஆறுதலான தகவல்களை அரசாங்கம் எப்பொழுது வெளியிடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பலதரப்பட்ட மக்களின் மனக்கண்முன் தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது.

வேண்டும் விடுதலை வேண்டாம் உயிரிழப்பு. கொரானாவை வெல்வோம். கூட்டம் கூடுவதை தவிர்ப்போம். அரசு வழிகாட்டுதலை கடைப்பிடிப்போம் என்று உறுதிமொழி ஏற்று தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதற்கான வழிமுறைகளை கையாள்வோம். வாழ்வாதாரத்திற்கான புதிய வழியை தேடுவோம்.

– சாமி