[responsivevoice_button voice=”Tamil Male”]தமிழ் மக்களின் முக்கிய கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோயில் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா வல்லகோட்டை கிராமத்தில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் கிழக்கு நோக்கியபடி ஏழு அடி உயரத்தில் கோடை ஆண்டவர் என அழைக்கப்படும் சுப்ரமண்ய சுவாமி வள்ளி தேவசேனாவுடன் காட்சி தருகிறார்.
“சொல்லச் சொல்ல வாய் மணக்கும்” திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலம். இந்த வல்லக்கோட்டையை கோட்டை நகர், கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்று இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி எட்டு பதிகங்கள் பாடியுள்ளார்.
புராணத்தில் வல்லக்கோட்டை:
வல்லன் எனும் ஒரு அசுரன் தேவர்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்து வந்தான். தேவர்கள் இவனது துன்பம் தாங்காது முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று அவனை இங்கு வதம் செய்தார் முருகன். வல்லனின் இறுதி விருப்பப்படி முருகனே இவ்வூரை வல்லன் கோட்டையாக்கினார் என்பர். இதுவே காலப்போக்கில் வல்லக்கோட்டை ஆனது .
ஒருமுறை தேவர்களின் மன்னரான இந்திரன் தமது குருவாகிய பிரகஸ்பதியிடம் முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறுவதற்கு ஒரு சிறந்த ஒரு இடத்தை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரகஸ்பதியும் முருகனின் தங்குமிடமான வல்லக்கோட்டைக்குச் செல்ல பரிந்துரைத்தார். உடனே இந்திரனும் இத்தலம் வந்து, ஒரு பாதிரி மரத்தடியில் முருகனின் உருவத்தினை பிரதிஷ்டை செய்து, பின்பு தனது வஜ்ராயுதத்தால் பூமியைத் துளைத்து ஒரு திருக்குளத்தை உண்டாக்கி , அதிலிருந்து நீரை எடுத்து அபிஷேக ஆராதனை செய்து இஷ்ட சித்திகளையும் பெற்றார் என்பது வரலாறு.
இந்த ஸ்தலம் இந்திரன், முருகப் பெருமானின் அருள் பெற்ற சிறப்பான ஸ்தலம் என்றும், மற்றும் இங்குள்ள திருக்குளம் வஜ்ர தீர்த்தம் என்றும் இந்திர தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஸ்தல வரலாறு:
இல…சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்ற நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷிகள், முனிவர்களை மதிப்பது இல்லை. ஒருமுறை இந்த மன்னனை காண நாரத மகரிஷி வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ அவரை வரவேற்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரத மகரிஷி அந்த நாட்டை விட்டு வெளியேறி அருகிலிருந்த காட்டின் வழியே சென்றுக்கொண்டிருந்தார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் எதிரே வந்து கொண்டிருந்தான். நாரத மகரிஷியை கண்ட கோரன் அவரை வணங்கி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றான். இவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார். பின், நாரத மகரிஷி கூறியதை ஏற்று அசுரனும் இல…சி நாட்டின் மீது படை எடுத்து அவன் நாட்டை கைபற்றிக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று காட்டிற்குள் அலைந்து திரிந்தான். அங்கு நாரத மகரிஷியை கண்டான். அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அவன் மீது கருணைக் கொண்ட நாரத மகரிஷி பகீரதனை துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார். பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் அலைந்து திரிந்து, ஒரு வழியாக துர்வாசமுனிவரை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் தன் நிலையைக் கூறி, நாட்டை மீட்க வழி கேட்டு மன்றாடினான், துர்வாச முனிவர் அவனிடம், இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து பாதிரி மரத்தடியில் உள்ள இந்திரன் பிரதிஷ்டை செய்த முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி, வாழ்வு வளம் பெறும் என்று கூறிச்சென்றார். பகீரதனும் அவர் கூறியபடியே கோட்டை நகரை அடைந்தான். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே, அவன் முனிவர் கூறியபடியே அங்கிருந்த முருகனை வழிபட்டான். முருகனின் அருளினால் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு கோயில் ஒன்றை கட்டினான். இவன்
கட்டிய கோயில் தான் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழ்:
முருகன் குடி கொண்டுள்ள ஸ்தலங்கள் தோறும் சென்று பதிகங்கள் பாடி வழிபாடு செய்து யாத்திரை மேற்கொண்ட அருணகிரி நாதர் திருப்போரூர் வந்து முருகனை தரிசித்து விட்டு மறுநாள் திருத்தணி செல்லலாம் என நினைத்து கொண்டே இரவில் அங்கு தங்கினார் அருணகிரிநாதர் கனவில் கோடைநகர் குமரன் தோன்றி , “என்ன அருணகிரியாரே ! ‘என்னை மறந்தனையோ,” என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்ட அருணகிரிநாதரும் திருத்தணி செல்லும் முன் வல்லக்கோட்டை திருத்தலம் அடைந்து அங்குள்ள சுப்பிரமணிய சுவாமியை கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது எட்டு பதிகங்களைப் பாடினார். அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக் கோட்டையை கோட்டை நகர் , கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே அழைக்கின்றார்கள்.
ஸ்தல அமைப்பு:
சிறிய ஆலயம் என்றாலும் புராதனப் பெருமையுடன் அமைந்து உள்ள வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இராஜகோபுரம் ஐந்து நிலையினைக் கொண்டு அமைந்துள்ளது. வாயிற்கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றதும் மகா மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், பின்பு கருவறை வாயிலை கடந்து சென்றவுடன் ராஜ கம்பீரத்துடன் ஏழு அடி உயரத்தில் கிழக்கு நோக்கியபடி வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் கன்னி மூலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ விஜய கணபதி சன்னதி, அடுத்து ஸ்ரீ உற்சவர் சன்னதி, அதனருகில் ஸ்ரீ சண்முகர் சன்னதியும், மற்றும் ஸ்ரீ தேவிகருமாரி திரிபுரசுந்தரி சன்னதியுமாக அமைந்துள்ளது.
ஸ்தல தீர்த்தம்:
இத்தலத்திலுள்ள வஜ்ஜிர தீர்த்தம் இந்திரனால் உருவாக்கப்பட்டு, பாவத்தைப் போக்கும் புனித தீர்த்தமாக விளங்குகிறது.
ஸ்தல விருட்சம்:
இத்தலத்தின் ஸ்தல விருட்சம் பாதிரி மரமாகும்.
ஸ்தல சிறப்பு:
இத்தலத்தில் வியாழக்கிழமை இரவு தங்கி, வஜ்ஜிர தீர்த்தத்தில் குளித்து, வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதனால் சகல செல்வங்களும் கிட்டும் மற்றும் வல்வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க் கிழமையிலும், சஷ்டி திதியிலும், பரணி, கிருத்திகை நட்சத்திர நாட்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாக பிரம்மோற்சவப் பெருவிழா பத்து நாள்கள் நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு பால் குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும் வருகின்றார்கள். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானின் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஐப்பசி மாதம் கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப் பூசம் இந்த கோயிலில் மிக விமரிசையாக நடக்கின்றன.
இதைத்தவிர மாசி குமார சஷ்டி, பங்குனி உத்திரம், தமிழ் வருடப் பிறப்பு, ஆங்கில புத்தாண்டு முதலியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நேர்த்திக்கடன் :
பால்குடம் , முடிகாணிக்கை செலுத்துதல் போன்றவற்றை நேர்த்திக்கடனாகவும், காது குத்துதல், திருமணங்கள் ஆகியவைகளை இங்கு செய்வதாக வேண்டிக்கொண்டும் செய்கிறார்கள்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 05.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாலை 03.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும் .
கோயிலுக்கு செல்லும் வழி:
-ஸ்ரீபெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பத்து கி.மீ. தொலைவிலும், தாம்பரத்திலிருந்து இருபத்து ஏழு கி.மீ தொலைவிலும் உள்ளது. இக்கோயிலுக்கு நிறைய பேரூந்து வசதிகள் உள்ளன.
தரிசன பலன்கள்:
வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகப்பெருமானைத் தரிசனம் செய்து வழிபடுவதினால் எடுத்த காரியம் யாவும் வெற்றி பெறும். திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
வல்வினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லக்கோட்டை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
“உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் பணியாய் ஒளியாய் தருவாய் உயிராய் சதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!”[/responsivevoice]
More Stories
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!
“ஆன்மீக தொண்டு மூலம் சக்தி ஒளி பரவச் செய்தவர்
‘அம்மா’ பங்காரு அடிகளார்”
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்