November 2, 2024

ரெயில்கள் இயக்கப்படாததால் சென்னை ரெயில்வேக்கு இத்தனை கோடி இழப்பா?

நடப்பு 2020-21-ம் ஆண்டு கணக்குபடி சென்னை மண்டலத்தில் ரெயில்கள் இயக்கம் மூலம் வெறும் ரூ. 1,407.2 கோடி ரூபாய் வருவாயே கிடைத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்னக ரெயில்வேயின் சென்னை மண்டலத்தில் வருவாய் இழப்பு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தென்னக ரெயில்வே அனைத்து ரெயில்களையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல நூறு கோடி ரூபாய்களை தென்னக ரெயில்வே இழந்துள்ளது.

2016-17-ம் ஆண்டு சென்னை டிவிசனில் 3,328.69 கோடி வருவாய் கிடைத்தது. 2017-18-ம் ஆண்டு அது ரூ.3,048.91 கோடியாக குறைந்தது. 2018-19-ம் ஆண்டு அது ரூ.3,721.48 கோடியாக அதிகரித்தது. 2019-20-ம் ஆண்டு நிதியாண்டில் அது ரூ. 3,202.62 கோடியாக இருந்தது.

நடப்பு 2020-21-ம் ஆண்டு கணக்குபடி சென்னை மண்டலத்தில் ரெயில்கள் இயக்கம் மூலம் வெறும் ரூ. 1,407.2 கோடி ரூபாய் வருவாயே கிடைத்துள்ளது. இதன் காரணமாக முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ரூ. 1,795 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைத்த வருவாயில்தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டு பயணிகள் கட்டணம் மூலம் ரூ.2,014 கோடி கிடைத்து இருந்தது. தற்போது அது ரூ.476 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தென்னக ரெயில்வேக்கு கடந்த சில மாதங்களாக வருவாய் இழப்பு அதிகரித்துள்ளதால் பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திலும் எந்த அளவுக்கு வருவாய் உள்ளதோ அதற்கேற்ப ரெயில் நிலையங்களிலும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். தற்போது வருவாய் வீழ்ச்சி காரணமாக பயணிகளுக்கு கிடைக்க வேண்டிய பல முக்கிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.