November 10, 2024

ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சுரங்கத்தின் குழியில் சேகரிப்பது, அதனால் ஏற்படும் பயன்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இப்பூங்கா உதவி புரியும்

ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்த சுற்றுச்சூழல் பூங்கா, நீர்நிலைப்பாதை, வறண்ட நிலத்தாவரங்கள், கற்றாழை அடினியம் தோட்டம், பந்தல்பூங்கா, புல்வெளி மற்றும் கல்பூங்கா என பிரிக்கப்பட்டு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பூங்காவில் சுரங்கத்தில் உள்ள தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா (Rockery Garden), நடைபாதை, 40 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் (மியாவாக்கி) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய மண்ணின் மரங்களான வேம்பு, புங்கம், அரசு, அத்தி, ஆலமரம். வாகை, நாவல், வில்வம், விலா, இலந்தை, மகிழம், நீர்மருது, கோனவேல், செம்மரம், மஞ்சநெத்தி, நொச்சி, ஆவாரை போன்றவைகளும், வறட்சி மற்றும் நீரில் வாழும் நாட்டு மரங்களான கருவேலம், வெல்வேலம், குடைவேல் போன்ற மரங்களையும், சுமார் 200 இனங்களைக் கொண்ட மர வகைகள், புதர் செடி, கொடி வகைகள், கள்ளி, கற்றாழை, நித்ய கல்யாணி, கற்பூரவள்ளி, தூதுவளை, கரிசிலாங்கன்னி, புல் போன்ற தாவரங்களும் இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 2.50 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் புதர்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

இப்பூங்காவை பார்வையிடும் மாணவர்கள் / பொதுமக்களுக்கு தாவரங்களின் தன்மைகள், நாட்டு மரங்களின் பெருமைகள், தாதுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாறைகளைப் பற்றிய அறிவியல் உண்மைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், சுரங்கத்தை மறுசீரமைப்பதால் பறவைகள், சிறிய விலங்குகள், வண்டினம், பூச்சிகள், தேனீக்கள், பட்டாம்பூச்சி, எறும்பு, கரையான் போன்றவை எவ்வாறு வந்தடைகின்றன என்பதையும், அதன்மூலம் சுற்றுச்சூழல் எவ்வாறு மேம்படுகிறது, இது விவசாயப் பெருமக்களுக்கு எப்படி உதவிகரமாக இருக்கிறது என்பதை பற்றியும் அறிந்து கொள்ள இயலும்.

மேலும், மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சுரங்கத்தின் குழியில் சேகரிப்பது, அதனால் ஏற்படும் பயன்கள், உள்ளூர் தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரங்கள் தயாரிப்பது பற்றிய விவரங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லவும் இப்பூங்கா உதவி புரியும். 2023-ஆம் ஆண்டு முடிவில் 5 இலட்சம் நாட்டு மரக்கன்றுகள் 400 ஏக்கர் பரப்பளவில் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ்.தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், ஜி.அசோகன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, பி.வி. நிர்மலா வெங்கட்ராமராஜா, பி.வி. அபினவ் ராமசுப்பிரமணியராஜா, தலைமை செயல் அலுவலர் ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.