சென்னை: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி விட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசிய அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமையேற்கும் என்பது போன்றே தங்கள் கட்சியின் கருத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தீவிரமாக இப்போதே களம் இறங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தஞ்சையில் பேட்டி அளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை கருத்து தெரிவித்துள்ள தினகரன் தேசிய கட்சி ஒன்றுடன்தான் கூட்டணி என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போதைய சூழலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியுடன் அ.ம.மு.க. கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் இடம்பெற தயார் என்று அறிவித்திருப்பதன் மூலம் டி.டி.வி. தினகரன் தனது நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் எதிர்காலத்தில் இணைய போவதையே டி.டி.வி. தினகரன் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து டி.டி.வி. தினகரனை ஓரம் கட்டினர். இதன்பின்னர் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்கிற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வரும் தினகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வேட்டு வைத்தார். தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டுமென்றால் அதற்கு டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றே பா.ஜனதா விரும்புகிறது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி உள்ளது. அப்போது டி.டி.வி. தினகரனை சேர்ப்பது தொடர்பாக இப்போதே எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் என்றும் கடைசி நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன. இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க. கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜே.கே. கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இடம் மாறி பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று தி.மு.க.வை எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மேலும் பல அமைப்புகளும் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வியூகத்தை வகுத்துள்ளதாகவும் இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியை நிச்சயம் வீழ்த்தும் என்றும் அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.