October 11, 2024

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018-ம் ஆண்டு தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடக்கின்றன.

மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1,977.8 கோடியில் 82 சதவீதத்தை ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்கும். மீதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு இதுவரை எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1,977.8 கோடியாகும். இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ.12.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.