பெய்ஜிங்: ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு சீன தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதனார் 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டு போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென்சீன கடலில்168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்த பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரின் பயணத்தை ஆரம்பம் முதலே சீன அரசு எதிர்த்து வந்தது. இந்நிலையில் தற்போது தைவானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சீன ராணுவத்தை போருக்கு தயார் படுத்துவமாறு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைமையகமான மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டுப் பணியாளர்கள் துறையை பார்வையிட்ட ஜின் பிங், உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருவதாக கூறி உள்ளார்.
அப்போது ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜின்பிங், போருக்கு தயாராகி சீனாவை புதிய சகாப்தத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். சீனாவில் ஆயுதப்படை பயிற்சி மற்றும் தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். ஒட்டுமொத்த ராணுவமும், அனைத்து ஆற்றலையும் அர்ப்பணித்து போருக்கான தயார் நிலைக்கு அதன் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். போராடி வெற்றி பெறும் திறனை அதிகரிக்க வேண்டும். புதிய சகாப்தத்தில் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். மேலும் சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் சீனாவின் பாதுகாப்பு சூழ்நிலையில், உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை தூண்டி உள்ளது. அதனால் தான் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவனம் தனது புதிய தசாப்தத்தில் உள்ள பணிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், கட்டளைகள் மற்றும் செயல்பாட்டில் புதிய மாற்றங்களை வேண்டும் என்று ஜின்பிங் தெரிவித்ததாக அந்த நாட்டின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், சீனா-தைவான் இடையேயான பதற்றம் ஆகியவற்றில் சீனாவின் நிலைப்பாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நிலையில், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் சீனாவை முதன் மைபடுத்தும் வகையில் ஜின்பிங் இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.