December 7, 2024

பொன்விழா ஆண்டில் சசிகலாவின் அரசியல் பிரவேசம்! அதிர்ச்சி தரும் பேச்சுகள்!!

பொறுத்தது போதும் பொங்கி எழு… என்ற சினிமா வசனமும் சசிகலாவின் அரசியல் அதிரடி தொடக்கம் பொன்விழா காணும் அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கொடியை ஏற்றுவதும், கல்வெட்டை திறப்பதும் அதிமுக கொடியுடன் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பவனிவருவதும், அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை விடுவதும் ஒரு எச்சரிக்கையாகவே இருக்கின்றது. துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி துரோகிக்கு துணை போகிவிட்டார் ஒ.பன்னீர்செல்வம் என்று கடந்த காலங்களில் சசிகலா ஆதரவாளர்களால் பேசப்பட்டு வந்தது. தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக விமர்சனம் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன் என்று அறிக்கை விட்டதும், கட்சி தேர்தலில் தோல்வியுற்றப் பிறகு மீண்டும் அதிமுகவை கைப்பற்றிவிடுவேன் என்று அறிக்கை விடுவது சசிகலாவுக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் எந்தவகையிலும் ஆதரவாக அமையும் என்பது புரியவில்லை. அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தரப்போ எந்தவகையிலும் சசிகலா அவர்களை அதிமுகவிற்கும் நுழைய விடமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் எதிர்வினை ஆற்றுவதும் ஒருபுறம் இருந்தாலும் சசிகலாவின் செயல்பாடுகளை எதிர்த்து தடுத்து நிறுத்துகின்ற அளவிற்கு தலைவர்களும் தொண்டர்களும் இயலாமல் இருப்பது ஒருநாள் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை சுலபமாக சசிகலா கைப்பற்றுவதற்கு வாய்ப்பாக அமைந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ தற்போது அதிமுக நிர்வாகிகள் தரப்பிலோ துணிச்சல் இல்லை என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது தற்போதைய சூழல். எம்.ஜி.ஆரின் சொத்துக்கள், ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஜெயலலிதா தொடங்கிய தொலைக்காட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரில் உள்ள அதிமுக தலைமை அலுவலகங்கள் அனைத்தும் சசிகலா கட்டுப்பாட்டில் சட்ட ரீதியாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம் மாவட்ட அளவில் உள்ள கட்சி கட்டடங்கள் அனைத்திற்கும் நிலத்தின் உரிமையாளராக இருப்பவர் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூங்குன்றன் அவர்களின் பெயரில் உள்ளது என்பதை தெரிந்தும் தெரியாமலும் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் மற்ற நிர்வாகிகள் இருப்பது புரியதாக புதிராக உள்ளது. சசிகலா அவர்களின் தொடர் பேட்டியும் அதிரடி நடவடிக்கையும் அதிமுகவை முழுவதுமாக கைப்பற்றுவதற்கு பயன்படுமா அல்லது பொய்த்து போகுமா என்பதை போக போக புரிந்து கொள்ளலாம்.

-டெல்லிகுருஜி