தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் பிரமாண்ட கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடை பெற்ற இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று பெரியார் உலகம் பிரமாண்ட கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், என் தாய் வீட்டிற்கு வந்துள்ளேன் என்று தான் அர்த்தம். தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை. இங்கு வரும்போது, உற்சாகம், புத்துணர்ச்சி பெறுகிறேன். எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது. நாங்களும் இந்த வீட்டில் ஒருவர் தான்.
தமிழ் இனத்திற்கே பெரியார் திடல் தலைமையகம். சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றிற்கு தலைமையகமாக இந்த இடம்தான் உள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாகவும் பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது. பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்டுதற்காகத் தான், பெரியார் உலகத்தை கி.வீரமணி உருவாக்குகிறார். சமூகநீதி காவலரான வி.பி.சிங் தொடங்கி பெரியார் திடலுக்கு வராத தலைவர்களே இல்லை என்று சொல்லலாம். பெரியார் கொள்கை வாழும் காலமெல்லாம் என் புகழும் இருக்கும் என்ற பெருமை எனக்கு உள்ளது. நாங்கள் செல்லும் பாதையே பெரியார் திடல் பாதை தான். இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு, இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை.
தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த அறிவார்ந்த சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்பையும், உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கி தரக்கூடிய கடமையை தி.மு.க. ஆட்சி நிச்சயமாக செய்யும். இந்த 90 வயதிலும் கி.வீரமணி இவ்வளவு சுறுசுறுப்போடு பணியாற்றி வருவதை பார்க்கும் போது பொறாமை கூட ஏற்படுகிறது. 10 வயதில் தொடங்கிய தனது சமூக பணியை இந்த வயதிலும் அவர் மேற்கொண்டு வருகிறார். ஆசிரியர் கி.வீரமணியை வெற்றி மணி என்று கலைஞர் பாராட்டி இருக்கிறார். பெரியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதியை சமூக நீதி நாளாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டோம். அதன்படி நாம் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.