December 7, 2024

புதுவை சட்டசபை தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி

புதுவை சட்டசபையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்ளிட்ட 324 பேர் போட்டியிடுகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 10 லட்சத்து 4,507 வாக்காளர்கள் வாக்களிக்க 952 பிரதான ஓட்டுச்சாவடிகள் 604 துணை ஓட்டுச்சாவடிகள் உள்பட 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்குச்சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகள், பார்வையற்றோர் வாக்கு அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வெயிலுக்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குச்சாவடிகளில் காலையிலேயே மக்கள் குவிந்தனர். இதனால் காலை 10 மணியளவில் புதுவை முழுவதும் 17 சதவீத ஓட்டுகள் பதிவானது. தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடந்தது.

மாநிலத்தில் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். முடிவில் மாநிலம் முழுவதும் 81.64 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் 84.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலை விட தற்போது 2.44 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

  • புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 81.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • புதுச்சேரியில் அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • புதுச்சேரியில் குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.