November 10, 2024

புதுச்சேரி கவர்னர் தமிழிசை மத்திய மந்திரியுடன் சந்திப்பு- மருத்துவமனைகளை மேம்படுத்த கடிதம்

சென்னை: புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது, பல்கலைக்கழக ஒப்புதலுடன் புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார். முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்வி தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறித்தும், புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் விவாதித்தார். இதுதொடர்பான கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் அளித்துள்ளார். துணைநிலை கவர்னரின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், மேலும் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.