தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, ரீமேக் படம் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார்.
சூர்யாசூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது ‘சூரரைப்போற்று’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும்.
இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘சூரரைப்போற்று’ திரைப்படத்துக்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்த கதையை நான் முதன்முதலில் கேட்டதில் இருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அதன் ஆன்மா அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.
More Stories
உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை