May 24, 2022

பழமொழிக் கதைகள்

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்தன் பிள்ளை தானே வளரும்!

ஊரார் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டித் தன் பிள்ளைகளைப் பட்டினி போட்டால் என்னாகும்? தானே வளருமா? கண்டிப்பாக இல்லை.பின் ஏனிந்த பழமொழி வந்தது?

தன் எதிரே மண் வெட்டியுடன் நடந்து வந்து கொண்டிருந்த விவசாயியைப் பார்த்து அந்த ஊர்ப் பள்ளித் தமிழாசிரியர் கேட்டாராம்.

“உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“நான்கு!”

“இதில் உனக்குப் பிறந்தது எத்தனை? ஊரானுக்குப் பிறந்தது எத்தனை?”

விவசாயிக்குக் கெட்ட கோபம் வந்துவிட்டது.

“தமிழ் வாத்தியாராச்சேன்னு பாக்குறேன்! வேற ஆள் இந்தக் கேள்வியக் கேட்டிருந்தா மண் வெட்டியாலேயே மண்டையிலப் போட்டிருப்பேன். இதெல்லாம் ஒரு கேள்வியா… சீ!”

நானொன்றும் தப்பாகப் பேசவில்லையே!“

ஊரான் ஊரான் தோட்டத்திலேஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா!காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லிகாகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்!வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப்பணம் அதுவேடிக்கைக் காட்டுதாம் சின்னப் பணம்!வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டுவேஷம் குலைந்தாளாம் வீராயி!”

“இந்தப் பாட்டை நீங்கள்தானப்பா பாடி வைத்தீர்கள். பின்னே எதற்கு என் மீது கோபிக்கிறாய்?”

“இந்தப் பாட்டுக்கும் நீங்கள் கேட்ட விதத்திற்கும் என்ன சம்பந்தம்?”“சம்பந்தம் இருக்குதப்பா! ஊரான் தோட்டம் என்றால் என்ன?”“அடுத்தவர் வீட்டுத் தோட்டம்!”

“அப்போ! ஊரானுக்குப் பொறந்ததுன்னா என்ன அர்த்தம்?”“அடுத்தவனுக்குப் பொறந்ததுன்னு சொல்லவாறீங்களா!”

“நல்லாக் கவனி! மறுபடியும் சொல்றேன்! உனக்குப் பிறந்தது எத்தனை? ஊரானுக்குப் பிறந்தது எத்தனை?”

“எனக்குப் பொறந்ததுதானய்யா எல்லாக் குழந்தையும். ஊரானுக்குப் பொறந்ததுன்னு எப்படி நீங்க கேட்கலாம்.”

“விளக்கமாகச் சொல்றேன். கேளு!”

“உனக்குப் பொறந்ததுன்னு சொன்னா அது உன் வீட்டிலேயே உன்னோட தங்கியிருந்து வாழ்க்கை நடத்தப் போற ஆண் பிள்ளைகள்.”

“ஊரானுக்குப் பொறந்ததுன்னு சொன்னா, அது அடுத்த வீட்டுக்கு மருமகளாப் போயி வாழப் போகிற நீ பெத்த பெண் பிள்ளைகள். என்னதான் நீ பெற்ற பிள்ளையானாலும் அடுத்த வீட்டுக்கு வாழப்போற பிள்ளைகள் என்பதால் பெண் பிள்ளைகளை ஊரானுக்குப் பிறந்த பிள்ளைகளுன்னு சொன்னேன்.

தமிழாசிரியரின் விளக்கம் கேட்டு சமாதானமடைந்தார். இதுபோல் யாரிடமும் கேட்டு வைக்காதீர்கள். என் போலும் பிறர் இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்து விட்டுப் போனார் விவசாயி!

ஆகவே ‘ஊரார்’ என்பது அடுத்த நபரைக் குறிக்கிறது.

ஊரார் பிள்ளை என்றால் ‘அடுத்தவர் வீட்டுப் பிள்ளை என்பதாகப் பொருள்.

அடுத்தவர் வீட்டுப் பிள்ளையை நாம் ஏன் ஊட்டி வளர்க்க வேண்டும்?

ஊட்டி வளர்க்க வேண்டிய நிலை வரும்போது அதைச் செய்துதானே ஆக வேண்டும்.

அதுதான் எந்த நிலை? அடுத்தவர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவள் மனைவியாகிறாள். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது அவளுக்கு எது பிடிக்குமென அறிந்து கணவன் ஊட்ட வேண்டும்.

மசக்கையினால் மனைவி சாப்பிட மறுக்கும் போது கணவன் அன்பாக சத்தான உணவை ஊட்டி மனைவியை வளர்த்தால் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வளருமல்லவா!

ஆகவே ஒவ்வொரு கணவனும், மனைவி கர்ப்பமாக இருக்கும்போது நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அவரின் மனைவி கர்ப்பவதியாக இருக்கும்போது நன்றாகக் கவனித்தார். மனைவியை அல்ல… மனைவியின் தங்கையை!