பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரளி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி, சாய்தள வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் 177 இடங்களில் 388 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 73 ஆயிரத்து 695 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் 38 இடங்களில் உள்ள 96 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றிட அனைத்துவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா மூலமாகவும், மத்திய அரசின் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலும், போலீசாரின் கூடுதல் பாதுகாப்புடனும் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக குன்னம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, குன்னம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கர், குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!