திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், நீட் தேர்வை திணித்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள 6 மாவட்டங்களுக்கும் சேர்த்து, கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது தவிர, மீதி 66 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக இந்தக் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு திமுக மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு பேச்சாளர் பங்கேற்று, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு குறித்தும், அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது. மக்களின் கையெழுத்துக்களைப் பெறுவதற்காகப் போஸ்ட் கார்ட் மற்றும் இணையதளம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாகப் பெறப்பட்டது. 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணியின் மாநாட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது. பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக, அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ”50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம்.
கையெழுத்துப் பெறும்போது எதற்காக இந்தக் கையெழுத்துப் பெறுகிறோம் என்பதைப் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவும். தேவையெனில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டிய தன் அவசியம் குறித்த துண்டறிக்கைகளைவிநியோகம் செய்தும் கையெழுத்துப் பெறலாம். இவை தவிரக் கல்லூரிகளுக்கு முன்பு மாணவர்களின் கையெழுத்துகளைப் பெறலாம். அது இந்த இயக்கத்தை இன்னும் மக்களடம் நெருக்கமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க உதவும். திருமண மண்டபம் போன்ற இடங்களை முன்பதிவு செய்து, பொதுமக்களை, மாணவர்களை அழைப்பது போன்ற பணிகளை இப்போதிலிருந்தே தொடங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…