September 18, 2024

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டிய புதிய அணை- தமிழக விவசாயிகள் கவலை

கர்நாடக பாஜக அரசு 10 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு அணையை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

இதனை நம்பி தமிழகத்தின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தென்பெண்ணை ஆற்றின் நீரை கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு திருப்பிவிட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. தென்பெண்ணையாற்றின் முக்கிய நீராதாரமாக உள்ள துணை நதியாக உள்ள மார்க்கண்டேய ஆற்றில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக 2020-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போதும் அதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக இந்த விவரம் பற்றி பேசப்படவில்லை.

இந்த நேரத்தில் சத்தமின்றி தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையை கட்டி முடித்து விட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த ஆணை விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலத்தையும் மற்றும் தமிழக தேர்தலையும் பயன்படுத்தி அரசியல்வாதிகள் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள் என்ற நோக்கத்தில், கர்நாடக அரசு 10 மாதங்களில் 430 மீட்டர் நீளமும், 50 மீட்டர் உயரமும் (162 அடி உயரம்) கொண்ட ஒரு பெரிய தடுப்பனையை காட்டுபகுதியில் கட்டியுள்ளனர்.

இந்த அணைக்கு மதகுகள் கூட வைக்கப்படவில்லை, 162 அடி உயரம் தண்ணீரை தேக்கும் அளவிற்கு இந்த அணையை கட்டி முடித்துவிட்டார்கள். மத்திய நீர்பாசனத்துறை தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் கடலில் கலப்பதால், பாலாறு- தென்பெண்ணை இணைக்கும் திட்டத்தை அறிவித்தார்கள். இந்த அணைக்கட்டப்பட்டதால் தென்பெண்ணைக்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

நீராதாரமும் பாதிக்கப்படும். அத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணைக்கும் இனி தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த அணையில் தேங்கும் தண்ணீரை தான் பெங்களூர் மற்றும் கோலார் மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லுவதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

கர்நாடக பாஜக அரசு 10 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு அணையை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொதுச் செயலாளர் ஏ.சி. வெங்கடேசன் கூறியதாவது, மார்கண்டேய நதியின் குறுக்கே தற்போது கர்நாடக அரசு புதியதாக கட்டப்பட்டுள்ள அணையால், தமிழக மக்கள் குறிப்பாக அருகாமையில் உள்ள இந்த 12 மாவட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பாலாறு தென்பெண்ணை இணைப்பு திட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைகளை உடனடியாக தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.