September 18, 2024

தென்னிந்திய படங்களில் நடித்ததால் என்னை பாலிவுட் கைவிட்டது- மனம் திறந்த ஜெனிலியா

பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஜெனிலியா, தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்று கூறியது. ஆனால், எனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.