November 10, 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- ஜனவரி மாதம் முதல் அமல்

சென்னை:

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்து செயல்படுத்திய, அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் எண்ணற்றவை. இந்த நாட்டிற்கே வழிகாட்டுபவை.

அந்த வகையில், அண்மையில், பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களைச் சார்ந்த சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து, பின்வரும் முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து, நிதிநிலை அறிக்கையில் 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்குக் கடும் நெருக்கடியான நிதிச்சூழல் இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே, அதாவது, 1.1.2022 முதல், அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதன்மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே, அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால், மூன்று மாத காலத்திற்குக் கூடுதலாக ஆயிரத்து ரூ.620 கோடி செலவினம் ஏற்படும். ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ. 6 ஆயிரத்து 480 கோடி செலவாகும்.