ஓட்டு எண்ணிக்கையின்போதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் கட்சியினர் நடந்து கொள்வது தொடர்பான சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “கரூர் தொகுதி ஓட்டுக்களை எண்ணும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து இருந்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை” என்று கூறி இருந்தார்.
சென்னை ஐகோர்ட்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்தது.
கூடுதலாக 6 மேஜைகள் போடப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். கொரோனா தடுப்பு விதிகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது” என்று கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், “கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்த வேண்டும். ஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக வருகிற 30-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்றனர்.
தேர்தல் ஆணையம் மீது சென்னை ஐகோர்ட்டு சுமத்திய குற்றச்சாட்டுகள் நேற்று பரபரப்பை ஏற்படுத்தின. தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு விஷயத்தில் சரிவர செயல்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது.
அப்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஓட்டு எண்ணிக்கையின்போது கட்டுப்பாடுகளை அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏற்கனவே ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின்போதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் கட்சியினர் நடந்து கொள்வது தொடர்பான சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. அதன்படி தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது அரசியல் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடிப்பதோ, ஊர்வலமாக செல்வதோ கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதுபோல தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்கள் நடத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…