January 23, 2025

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 பேர் விண்ணப்பித்தனர்.

இதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அரசு, சுயநிதி மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி உள் ஒதுக்கீடு பிரிவுகளில் முதல் 10 இடங்களில் உள்ள மாணவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. நாமக்கல் – கீதாஞ்சலி, பிரவீன், திருவள்ளூர் – பிரசன் ஜித்தன் ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் தரவரிசையில் முதலிடம் பிடித்தனர்.

இளநிலை பட்டப்படிப்பு 2021-2022 ஆம் ஆண்டுக்கான அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 7825 (5175 + 2650). அதில் மாநில மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு மொத்த இடங்கள் 6999 (4349 + 2650). அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 1960 (200 + 1760). அதில் மாநில அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு மொத்த இடங்கள் 1930 (170 + 1760).

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப் பட்டியலை https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் சென்று காணலாம்.

தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ.இராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, தேர்வுக்குழு செயலாளர் வசந்தாமணி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.