December 6, 2024

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இங்கிலாந்தை வீழ்த்தி 41 வருடத்திற்குப்பின் அரையிறுதியில் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிராக மூன்று கால் பகுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஹாக்கி அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

41 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்கினர். முதல் கால்பகுதி (15 நிமிடம்) ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும், 16-வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த முறை குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர (30 நிமிடம்) ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

3-வது கால் பகுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் வீரர்களை கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பான வகையில் தடுத்தனர். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டனுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வார்டு கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி (45 நிமிடம்) ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

4-வது கால் பகுதி ஆட்டத்தில் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என்று கிரேட் பிரிட்டன் விளையாடியது. அதேவேளையில் தடுப்பு ஆட்டத்துடன் மேலும் கோல் அடிக்கும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் விளையாடினர்.

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கிரேட் பிரிட்டன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா ஆட்ட முடிவில் (60 நிமிடம்) 3-2 என வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.