December 6, 2024

சென்னை வருகிறார் ராகுல்: 28ல் பிரசாரம்

காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். அன்று காலை, வேளச்சேரியில் பிரசாரம் செய்யும் அவர், மாலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.காங்., – எம்.பி., ராகுல், தேர்தல் தேதி அறிவிக்கும் முன், தமிழகத்தில் மூன்று முறை சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தேதி அறிவித்த பின், முதன் முறையாக, நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில், ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

அங்கிருந்து, வேளச்சேரி செல்லும் ராகுல், அத்தொகுதியில் போட்டியிடும், காங்., வேட்பாளர் ஹசன் மவுலானாவை ஆதரித்து, திறந்த வேனில் தொகுதி முழுதும் சென்று ஓட்டு சேகரிக்கிறார். அவருடன் தமிழக காங்., தலைவர் அழகிரி உள்ளிட்ட, அனைத்து கோஷ்டி தலைவர்களும் செல்கின்றனர்.ராகுல் சுற்றுப்பயணம் விபரம், பிரசாரம் செய்யும் இடம், சாலை மார்க்கமாக செல்லும் இடங்களை, பாதுகாப்பு அதிகாரிகளும், தமிழக காங்., நிர்வாகிகளும் தயார் செய்து வருகின்றனர். அன்றைய தினம் மாலையில், சேலத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.அக்கூட்டத்தில், ராகுல் பங்கேற்று, தி.மு.க., – காங்., – ம.தி.மு.க., – விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.