ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதாக சுகாதாரத்துறையினர் கணித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் குறைந்து வருகிறது. கொரோனா 2-வது அலையின் வேகம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. அந்த மாதம் முழுவதுமே தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வந்தது.
இதனைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கால் நோயின் தாக்கம் குறைந்தது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி தினசரி பாதிப்பு 26 ஆயிரத்து 513 ஆக இருந்தது.
இதன் பிறகு ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு குறைந்துகொண்டே சென்றது. அந்த வகையில் ஜூன் 7-ந்தேதி அன்று 20 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு சென்றிருந்தது.
அதற்கு அடுத்த வாரத்தில் (ஜூன் 13) தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இப்படி குறைந்து கொண்டே சென்ற நோய் தொற்று ஜூன் இறுதியில் 4 ஆயிரத்து 500 ஆக இருந்தது.
இப்படி குறைந்து கொண்டே சென்ற நோய் தொற்று பெரிய அளவில் உயரவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதாக சுகாதாரத்துறையினர் கணித்துள்ளனர். அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து வருகிறது.
கடந்த 9-ந்தேதியன்று தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்திருந்தது. அன்று 3 ஆயிரத்து 39 பேர் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
சென்னையில் 180 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த பாதிப்பு 13-ந்தேதியன்று 2,505 ஆக குறைந்திருந்தது. சென்னையில் 160 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. நேற்று 1,970 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் 147 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை மாதங்களாகவே தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 17-ந்தேதியன்று 137 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது, அதற்கு அடுத்த நாள் 150 ஆக அதிகரித்து இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கை சிறிதளவே குறைந்துள்ளது. நேற்றும் 147 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் அதிக அளவு பொதுமக்கள் கூடுகிறார்கள். இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகளால் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதோ என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிமாவட்டங்களில் நோயின் தாக்கம் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது. கடந்த வாரம் சேலத்தில் தினசரி பாதிப்பு ஒருநாள் விட்டு ஒரு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு ஒன்று, இரண்டு என்ற எண்ணிக்கையிலேயே அதிகரித்து காணப்பட்டது.
சேலத்தில் கொரோனா பாதிப்பு 2.6 சதவீதத்தில் இருந்து 2.8 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு முந்தைய நாட்களில் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் நோய் தொற்று 3 சதவீதமாக இருந்தது. திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களிலும் நோயின் தாக்கம் சற்று அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமாக உள்ளது.
நேற்றைய தினசரி பாதிப்புகளை பொறுத்தவரையில் 3 மாவட்டங்களில் மட்டுமே முந்தைய நாளைவிட சிறிதளவு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் (18-ந்தேதி) 49 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரியில் 35 ஆக இருந்த தினசரி பாதிப்பு 52 ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் 30 ஆக இருந்த பாதிப்பு 32 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் தினசரி தொற்று குறைந்தே காணப்படுகிறது.
உயிரிழப்புகளை பொறுத்தவரை நேற்று தமிழகம் முழுவதும் 28 பேர் பலியாகி இருக்கிறார்கள். சென்னை, கோவையில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர். தஞ்சையில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். திருப்பூர், தூத்துக்குடி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த 17 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 21 மாவட்டங்களிலும் உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விசயமாகவே உள்ளது.
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது