December 6, 2024

சென்னையில் மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தொற்று உள்ளது. இந்நிலையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கொரோனா பரிசோதனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது.

லேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாமல் இருந்தாலோ, லேசான அறிகுறி இருந்தாலோ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடுவதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தொற்றின் தீவிரத்தன்மையை பொறுத்து நோயாளிகள் மருத்துவமனைக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா வார்டுகளுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளோம். சென்னையில் மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; தற்போது நாளொன்றுக்கு சுமார் 16,000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கூடுதலாக நாளொன்றுக்கு 25,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 200 வார்டுகளிலும் 400 காய்ச்சல் முகாம்களை நடத்தி தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட தெருக்களில் தன்னார்வலர்களை கொண்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.