[responsivevoice_button voice=”Tamil Male”]இயக்குநர் ஹரியும் சம்பளத்தை குறைத்தார்..
ஊரடங்கு காரணமாக தமிழ் சினிமா உலகமும், உறங்கி கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகளை ( எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு) தொடங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைத்ததும்,அந்த வேலைகளை ஆரம்பிக்கும் கையோடு, சில படங்களின் ‘ஷுட்டிங்’ கை தொடரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தங்கள் ஊதியத்தை குறைத்து கொண்டால் சினிமா உலகம் மீண்டு வர உதவியாக இருக்கும்’’ என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை குறைத்து கொள்வதாக அறிவித்தார். இப்போது விஜய் ஆண்டனி 3 படங்களில் நடித்து வருகிறார். மூன்று படங்களுக்கும், தனது ஊதியத்தில் 25 % குறைத்து கொள்வதாக கூறி இருந்தார். இந்த நிலையில், ஐயா, சாமி, சிங்கம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ஹரியும், தனது சம்பளத்தில் 25 % குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். அவர் தற்போது சூர்யா நடிக்கும் ‘அருவா’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி, ஹரி பாதையில் ஏனைய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள், சம்பளத்தை குறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி ஸ்டெயிலில் நடிகையின் குழந்தை..
நடிகை சமீரா ரெட்டியின் மகள் நயீரா. பிறந்து 10 மாதம் ஆகும் இந்த பெண் குழந்தை ரொம்பவும் சுட்டி. ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் சமீரா, தன் மகளை விதவிதமாக ஜோடித்து அழகு பார்த்து அதனை வீடியோ எடுத்து ,தனது வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் நயீரா, சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டெயிலில் கருப்பு கண்ணாடி அணிந்து போஸ் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார், சமீரா. ‘பேபி சமீரா’ ரஜினிகாந்த் போன்றே, கண்ணாடி பிரேமில் கை வைத்து போஸ் கொடுத்து, அழகு காட்டுகிறாள்,அந்த வீடியோவில். அந்த சூப்பர் போசுக்கு சமீரா ரெட்டி கொடுத்திருக்கும் தலைப்பு என்ன தெரியுமா? மாஸ் பேபி பேபி தலைவா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் சும்மா பேர கேட்டா அதிருதில்ல இந்த தலைப்பும், குழந்தையின் ரஜினி ஸ்டெயிலும், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஜினிகாந்த் தங்கிய ஓட்டல் மூடப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை வசீகரித்து வந்த எழில் மிகு நகரம் மைசூரு. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மைசூருவை களை இழக்கச்செய்து விட்டது. சுற்றுலா பயணிகள் சுத்தமாக வரவில்லை. ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டாலும், ’சமூக இடைவெளி’’யை கடைபிடிக்கும் பொதுமக்கள் சுற்றுலா பயணம் செய்வார்களா என்பது கேள்விக்குறியே. இதனால் மைசூருவில் உள்ள ஓட்டல்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று ‘சதர்ன் ஸ்டார்’ என்ற ஓட்டல். வெளிநாட்டு தொழில் அதிபர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் மைசூரு வந்தால் இந்த ஓட்டலில் தான் தங்குவார்கள்.
மைசூரூக்கு சினிமா ஷுட்டிங் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நட்சதிரங்கள் இந்த ஓட்டலில் தான் தங்குவது வழக்கம். 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஓட்டலில் 107 பிரமாண்ட அறைகள் உள்ளன. பெரும்பாலான நாட்களில் இங்குள்ள அறைகள் நிரம்பி வழியும். முன் கூட்டியே ரிசர்வ் செய்தால் தான் அறை கிடைக்கும். ஊரடங்கால், இப்போது ஓட்டல் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.’வருமானம் இல்லாததால், ’சதர்ன் ஸ்டார்’ ஓட்டலை காலவரையின்றி மூடிவிட்டார்கள். அங்கு வேலை பார்க்கும் 150 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டது, ஓட்டல் நிர்வாகம்.
ஊரடங்கு நேரத்தில் 11 கதைகளை எழுதிய மிஷ்கின்..
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். புத்தகங்களின் காதலர். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல இயக்குநர்கள் சிறைப்பட்டது போல் தங்களை உணர்ந்துள்ள நிலையில், மிஷ்கின், இதனை பயன்படுத்தி ஏராளமான ஆங்கிலப்-புத்தகங்களை கரைத்து குடித்துள்ளார். இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி மிஷ்கின் 11 திரைப்படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட்’ எழுதி முடித்துள்ளார்.
மிஷ்கினும்,சிம்புவும் இணைந்து ஒரு படத்தை தர உள்ளனர். அது எந்த நிலையில் உள்ளது என்று மிஷ்கினிடம் கேட்கப்பட்டது. நான் டைரக்டு செய்த ’அஞ்சாதே’ படத்தை பார்த்த சிம்பு எனக்கு போன் செய்தார். எப்போது தெரியுமா? படத்தின் இடைவேளையின் போது எனக்கு போன் செய்து படம் பிரமாதமாக இருப்பதாக கூறினார்.
படம் முடிந்து என்னை சந்தித்து பேசினார். அண்மையில் கூட நாங்கள் சந்தித்தோம். சிம்பு நடிக்க உள்ள படத்தின் கதையை அவரிடம் ஏற்கனவே சொல்லி விட்டேன். அவருக்கு பிடித்துள்ளது. இப்போது சிம்பு கைவசம் சில படங்கள் உள்ளன. அவற்றை முடித்து விட்டு என் படத்தில் நடிப்பார்’’ என்று விளக்கம் கொடுத்தார், மிஷ்கின்.
இரண்டாம் பாகம் எடுக்க திரிஷ்யம் இயக்குநருக்கு குடும்பத்தாா் எதிா்ப்பு!
மோகன்லால்- மீனா ஜோடியாக நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கிய மலையாளப்படமான ’’திரிஷ்யம்’’ 2013 ஆம் ஆண்டு வெளியானது. திரைஉலகை புரட்டிப்போட்ட படமாக அமைந்தது, திரிஷ்யம். மலையாளத்தில் மட்டுமல்ல. ‘ரீ- மேக்’ செய்யப்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தியிலும் திரிஷ்யம் பிரளயத்தை ஏற்படுத்தியது. சிங்கள மொழியிலும், சீன மொழியிலும் இந்தப்படம் ரீ-மேக் செய்ய பட்டது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் மலையாளத்தில் தயாராக உள்ளது. மோகன்லால் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இந்த பெருமை எல்லாம் கொரோனாவையும், அதன் மூலமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்கையும் தான் சேரும். ஆமாம்.
ஊரடங்கு கொடுத்த ‘விடுமுறை’’ நாட்களை பயன்படுத்தி திரிஷ்யம்- 11 வின் முழு ‘ஸ்கிரிப்ட்’டை உருவாக்கி உள்ளார், ஜீத்து ஜோசப். திரிஷ்யம் ‘கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்குமா? அல்லது இது வேறு கதையா?’’ என்று ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது, லேசாக முறைத்தார். முழுக்கதையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றவர், இரண்டாம் பாகம் உருவான விதம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறிக்கொண்டார். திரிஷ்யம் ரிலீஸ் ஆனதும் என்னை பார்த்தவர்கள் எல்லாம் இதன் இரண்டாம் பாகத்தை எப்போது எடுக்கப்போகிறீர்கள்?’’ என்று என்னை நச்சரித்-தார்கள். மோகன்லால் கூட’ திரிஷ்யம்’’ இரண்டாம் பாகம் கதையை ரெடி பண்ணச்சொன்னார்.
இரண்டாம் பாகத்தை தயாரிக்க மும்பையை சேர்ந்த இரண்டு , மூன்று இந்தி தயாரிப்பாளர்களும் தயாராக இருந்தார்கள். நான்கைந்து ஆண்டுகளாக இந்த படத்தின் கதை என் மனதில் ஓடிக்-கொண்டிருந்தது தி ̄ரென்று ‘ட்ராப்’’ செய்வேன். மீண்டும் துளிர்க்கும். ஊரடங்கில்தான் ‘திரிஷ்யம்-மிமி’ படத்துக்கு ஒரு வடிவம் கிடைத்தது. ஊரடங்கின் போது ஒரு வாரம் சும்மா தான் இருந்தேன். பின்னர் ‘திரிஷ்யம்-மிமி’ ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன். முதலில் இருந்து ஒவ்வொரு காட்சியாக எழுதினேன். முழு ‘ஸ்கிரிப்ட்’ எழுதி முடித்ததும், என் குடும்பத்தாரிடம் விஷயம் சொன்னேன். என் மனைவி, மற்றும் இரு மகள்களும் இரண்டாம் பாகம் வேண்டாம்’’’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். என் நண்பர்களும் இதே கருத்தை தெரிவித்தனர். முழுக்கதையையும் குடும்பத்தாரிடம் விளக்கமாக கூறினேன். அவர்களுக்கு பிடித்திருந்தது. மோகன்லாலுக்கு ‘ஸ்கிரிப்ட்’டை அனுப்பினேன். அவரும் ஓ.கே. சொல்லி விட்டார்.’’ என்கிறார், ஜீத்து ஜோசப். –பா.பாரதி.
More Stories
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை
அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்… ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்