November 10, 2024

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்கள் – சச்சின் சாதனையை தகர்த்தார் விராட் கோலி

புதுடெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சில் சிக்கி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 2வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 44 ரன்களும், 2-வது இன்னிங்சில் 20 ரன்களும் எடுத்தார். இதனால் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை சச்சினுக்கு பிறகு 25 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். சர்வதேச அளவில் விராட் கோலி 549 போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் 8,195 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 12,809 ரன்னும், டி20 போட்டிகளில் 4,008 ரன்கள் என மொத்தம் 25,012 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் 577 போட்டிகளிலும், ரிக்கி பாண்டிங் 588 போட்டிகளிலும், ஜாக் காலீஸ் 594 போட்டிகளிலும், குமார் சங்ககாரா 608 போட்டிகளிலும், மஹேலா ஜெயவர்தனே 701 போட்டிகளிலும் 25 ஆயிரம் ரன்களை எட்டினர்.