November 5, 2024

சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் இப்படித்தான் கூட்டணி இருக்கும்..

இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது தமிழ்நாடு. மக்களவை தேர்தலில் உருவான கூட்டணி சட்டசபை தேர்தலில் தொடரப்போவதில்லை. மூன்று பிரதான அணிகள் இந்த தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது உறுதி. தி.மு.க. தலைமையில் ஓர் அணி. அ.தி.மு.க.தலைமையில் மற்றொரு அணி. ரஜினி தலைமையில் இன்னொரு அணி. பா.ம.க., சீமானின் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.ஆகிய கட்சிகள் ஓரணியில் நிச்சயம் திரளப்போவதில்லை. ரஜினி என்கிற பிம்பத்தை விசுவரூபம் ஆக்கும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க.மேலிடம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் எந்த சூழலிலும் தி.மு.க.ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது பா.ஜ.க. அ.தி.மு.க.வை ஆதரிப்பதன் மூலம், தி.மு.கவின் வெற்றியை தடுக்க முடியாது என்று நம்பும் பா.ஜ.க. தலைமை- ரஜினியை கொம்பு சீவி விட்டு, அவரது வெற்றியை உறுதி செய்ய சில திரை மறைவு வேலைகளை தொடங்கியுள்ளது. ரஜினி புதிய கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.ஆகிய முக்கிய பிரமுகர்கள் அவரிடம் ஐக்கியமாகலாம். இதன் மூலம் தி.மு.க.வின் 40 % வாக்குகளும், அ.தி.மு.க.வின் 60% வாக்குகளும் ரஜினியின் கட்சிக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு அவரது வெற்றி உறுதியாகும் என்கிறார் அரசியல் சாணக்கியர் ஒருவர். உதயநிதிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அதிருப்தியில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர் மூலம் தி.மு.க. பிளவுபடும் என்று பா.ஜ.க. கருதுகிறது. அதன் மூலம் தனிக்கட்சி தொடங்க வைத்து அந்த கட்சியை ரஜினியுடன் கூட்டணி வைக்கச்செய்வதற்கும் திட்டம் ஒன்று உள்ளதாம்.

தி.மு.க.கூட்டணியில் இப்போது உள்ள கட்சிகளில் எந்த கட்சி சட்டசபை தேர்தலிலும் தொடரப்போகிறது?

மில்லியன் டாலர் கேள்வி. பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியே தி.மு.க.கூட்டணியில் தொடரும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை முன்னிறுத்தி வெற்றி பெற்றார். கூட்டணி கட்சிகளும் கூட இரட்டை இலையில் தான் நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர். அதுபோல் இப்போது 234 தொகுதிகளிலும் உதயசூரியனை முன்னிறுத்தும் ‘ஐடியாவை பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை ஒருக்காலும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. தி.மு.க.கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ் எந்த கூட்டணியில் சேரப்போகிறது என்று அப்போதுதான் தெரியும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் அமிலச்சோதனை. வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் உள்ளது. வரும் தேர்தலில் அமைச்சர்கள் தவிர யாரும் கைக்காசை செலவிடும் ஐடியாவில் இல்லை. வெற்றி பெற்றால் அரசியலில் தொடரலாம். தோற்றுப்போனால் ஏற்கனவே உள்ள பழைய தொழிலை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற திட்டமே அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. அ.தி.மு.க.கூட்டணியில் 50 தொகுதிகளை பா.ம.க.எதிர்பார்க்கிறது. அ.தி.மு.க.40 இடங்கள் ஒதுக்கவே விரும்புகிறது. பா.ம.க.வின் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் அந்த கட்சி ரஜினியுடன் சேரும் வாய்ப்புகள் உள்ளன. ரஜினி 30 இடங்களுக்கு மேல் பா.ம.கவுக்கு கொடுக்க மாட்டார். எனவே வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ள தொகுதிகளை பா.ம.க.பெற்றுக்கொண்டு, ரஜினியுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உண்டு. தி.மு.க.வில் இருந்து வெளியேறும் காங்கிரஸ் உதிரி கட்சிகளை ஒருங்கிணைத்து நான்காவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இந்த கூட்டணியில் இடதுசாரிகள் ஐக்கியமாகும் என்ற கேள்வி எழுகிறது.

எல்லோரும் கூறுவது போல் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை. கட்சி தொடங்குவதற்கு சிறிது காலம் தள்ளிப்போகலாம் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கட்சி தொடங்கலாம் என்பது தான் லேட்டஸ்ட் ரஜினிகாந்த் திட்டமாக உள்ளது.

– டெல்லி குருஜி