May 24, 2022

சக்கரவர்த்தியின் விருப்பப்படியே

“சக்கரவர்த்தியின் விருப்பப்படியே” என்ற சமுத்திரநாதன் மேலே சொல்லலானான். “கேரள நாட்டுக்குக் குமரி அல்லது பகவதி என்னும் காளி முக்கியமான தெய்வம் அதேபோல் பாண்டிய நாட்டுக்குப் பழனி ஆண்டியாகிய முருகன் தெய்வம். சோழ நாட்டுக்குச் சிவபெருமான் அல்லது பசுபதி தெய்வம். காளி சிவபெருமானை மணந்தாள்; குமரி கன்னிப் பெண்ணாகவே இருக்கிறாள்; இதுதான் வித்தியாசம். நம் கார்த்திகேயக் கடவுள் மணக்கவில்லை. ஆனால் இவர்களுடைய முருகன் அல்லது குமாரக் கடவுள், வள்ளி என்ற தெய்வப் பெண்ணை மணந்திருக்கிறான். இவர்கள் வழிபடும் பசுபதிக்கும் நம் சிவனுக்கும் வேற்றுமை உண்டு. இந்தப் பசுபதி ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழிலையும் செய்கிறான். நம் சிவபிரானோ ருத்திர மூர்த்தியாக மட்டுமே இருக்கிறார். இங்கே வழங்கும் தெய்வங்களின் பெயருக்கும் தெற்கே வழங்கும் தெய்வங்களின் பெயருக்கும் பெயரில் ஒற்றுமையுண்டே தவிரப் பொருள் வேறாக இருக்கிறது. அதே மாதிரிதான் இன்னும் பல விஷயங்களிலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும் இப்படியே தான். “நம் நாட்டில் உடம்பு முழுவதும் ஆடை உடுப்பது கௌரவமானவர்களுக்கு உரிய இலட்சணம். ஆனால் தெற்கே, இப்படி உடுத்தினால் பணியாள் என்று தான் எண்ணிக்கொள்வார்கள். வேலைக்காரர்கள் தாம் இப்படி உடுத்துவார்களாம். பிரபுக்கள் கண்ணில் அவர்களுடைய அங்கத்தின் அவலட்சணம் படக் கூடாதென்பது தான் காரணம். பிராம்மணர்களும் பிரபுக்களும் அங்கே வெறும் வேட்டி தான் உடுத்துகிறார்கள். அந்தப் பிராம்மணர்கள் மொத்தத்தில் இங்கே நம் நாட்டில் உள்ள நான்காம் வர்ணத்தவரைவி-டக் கறுப்பாகவே இருக்கிறார்கள். மாமிசம், முட்டை, மீன் ஆகியனவற்றுள் எதுவும் அவர்கள் சாப்பிடு-வதில்லை. அவர்களைப் ‘பார்ப்பார்’ (வேதத்தைப் படிப்பவர்கள்) அல்லது ‘ஐயர்’ (ஆரியர்) என்கிறார்கள் அங்கே. சாதாரண மக்களும் ஒருவரை ஒருவர் ‘ஐயா’ (ஆரியன் & சிறந்த இயல்பு உள்ளவன்) என்றே அழைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் வழங்கும் பாஷைக்குத் தமிழ் என்று பெயர். ஆரிய முனிவரான அகஸ்தியர் அதை உருவாக்கினார் என்கிறார்கள். சமஸ்கிருதம் பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளுக்கும் கரோஷ்டி மொழிக்கும் இருக்கும் வேறுபாட்டைவிட ஏன், பாரசீகர் யவனர்களின் பாஷைகளையும் விட அதிக வித்தியாசம் உள்ளதாய் இருக்கிறது. “தமிழ்நாட்டில் முடியரசர்கள் மூன்று பேர்; இவர்கள் தம் நாட்டை ஒழுங்காகவே ஆளுகிறார்கள் என்றாலும், ஒருவரோடு ஒருவர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அரசாங்க அலுவல்களைக் கவனிக்க ஐம்பெருங்குழு என்ற ஐந்து சபைகள் உண்டு. ஒன்றில் மக்களின் பிரதிநிதிகளும், இன்னொன்றில் மருத்துவர் பிரதிநிதிகளும், வேறொன்றில் புரோகிதர்களின் பிரதிநிதிகளும், பிறிதொன்றில் அதிகாரிகளுள் முக்கியமானவர்களும், நீதிபதிகளும் இருப்பார்கள். பொதுக் காரியங்கள் நடக்கும் போது நீதிமன்றத்தில் அரசனுடன் ராணியும் அமர்ந்திருப்பாள். நிலவரி, சுங்கம், போக்குவரத்துக் கட்டணம் ஆகியவையே முக்கிய வருமானம். பாண்டியநாட்டில் அடிமைகளையும் தீவாந்தரம், மரண தண்டனை முதலியவை விதிக்கப்பட்டவர்களையும் கடலில் மூழ்கச் செய்து முத்தெடுக்கிறார்கள். அதனாலும் அந்த நாட்டுக்கு நல்ல வரும்படி கிட்டுகிறது. கேரளம் என்னும் சேர நாட்டிலும் இப்படியே யானைகளை விற்பதால் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. சோழ நாடு நெல் களஞ்சியம். ஆகவே, அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் நிறைய வருமானம் கிடைக்கிறது. “நம் நாட்டில் இருப்பது போல் ஜாதிப் பாகுபாடு அங்கே இல்லை. பிராம்மணர்கள், தமிழர், புலையர் என்று மூன்று பிரிவுகள் அங்கே உண்டு. பிராம்மணர்கள் தனி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களை மற்றவர்கள் மதிப்புடனேயே நடத்தி வருகிறார்கள். தமிழர்களில் ஐந்து வகுப்பினர் இருக்கிறார்கள். அறிவோர், வேளாளர், இடையர், மறவர், பரதவர் என்ற வலைஞர் ஆகியோர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தோட்டிகளும் உண்டு. பெண்கள் ஆண்களின் எதிரே சர்வ சகஜமாகப் பழகுகிறார்கள். வாலிப வயதினர் தங்களுக்குள்ளேயே பேசி மணம் முடித்துக் கொள்வார்கள். “ஆடல் பாடல், விழாக்கள் ஆகியன நடத்துவது, கோழிகளையும் காடைகளையும், சண்டைக்கு விடுவது எனப் பல விதமாகப் பொழுதுபோக்குவார்கள். கூத்து என்ற நாடக வகை எங்கும் பிரபலமாக இருக்கிறது. அதில் பாட்டும் ஆட்டமும் பிரமாதமாக இருக்கும். இந்திரன், குமரன், சிவன்,
குமரி ஆகிய தெய்வங்களுக்குரிய பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். நம்மிடம் இருப்பது போலவே யானை, தேர், குதிரை, காலாட்படைகள் இருப்பதோடு அந்த மூன்று அரசாங்கங்களுக்கும் அவற்றுள்ளும் முக்கியமாகப் பாண்டிய நாட்டுக்கு வலிமையான கப்பற்படை உண்டு. பாண்டிய அரசன் இலச்சினை, மீன்தான். அலைகடலை வென்றதற்கு அறிகுறியாக அதைத் தம் கொடி முதலியவற்றில் பொறித்து வைத்திருக்கிறார்கள். பாண்டியர்கள், தரைச்சண்டை-யில் தோற்றாலும் அதை அவர்கள் பெரிதாகப் பாராட்டுவதில்லை. கடற்போரில் தோற்றுவிட்டால் தான் மனமுடைந்து போவார்கள். அங்குள்ள அரசர்கள் தம்மைக் ‘கலியுக ராமர்கள்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். காரணம், அவ்வப்போது சிங்களம் என்னும் இலங்கையின் மேல் அவர்கள் படையெடுத்துச் சிங்களவர்களை முறியடித்து வருவது தான். சோழர்களுடைய காலாட்படை வலிமையானது. அதற்கேற்றபடி ‘புலி’யைத் தம் இலச்சினையாகக் கொண்டிருக்
கிறார்கள். சேரர்களின் யானைப்படை மிகவும் வலிமையுள்ளது. “ஆனால், மூன்று தமிழ் அரசர்களின் குதிரைப் படையும் வலிமையற்றவை. ‘தெய்வாதீனமாக ஆண்டவன் குதிரைக்கும் மலைகளுக்கும் கொம்பு வைக்கவில்லை’ என்று அரசர்கள் சொல்கிறார்கள். இதிலிருந்தே மிகவும் முரட்டுக் குதிரைகள் என்றால் சமாளிப்பது சிரமம் என்று அவர்கள் அஞ்சுவது தெரியும்; சிறந்த அரபிக் குதிரைகளை இறக்குமதி செய்து அவைகளை ஓட்ட அராபியர்களையே படைவீரர்களாக வைத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் இப்படிக் கூலிப்படையை வைத்துக்கொண்டிருப்பது பின்னால் அவர்களுக்கே தீங்காக முடியலாம். “ஆனாலும் அவர்கள் நாட்டு மறவர்கள் மிகவும் துணிச்சல் கொண்டவர்கள். ஒருசமயம் வீரத்தாய் ஒருத்தி தன் மகன் போர்க்களத்தை விட்டுப் புறங்காட்டி ஓடினான் என்று கேள்விப்பட்டாளாம். உடனே போர்க்களத்தை நோக்கிக் கத்தியும் கையுமாகப் புறப்பட்டாளாம். அப்படி அவன் புறங்காட்டியது உண்மையாக இருந்தால், அவனுக்குப் பால் கொடுத்த தன் நகில்களையே அறுத்தெறிவது என்று துணிந்துவிட்டாளாம். ஆனால், போர்க்களத்தில் தன் மகன் மார்பில் காயப்பட்டு (விழுப்புண்) இறந்து கிடப்பதைக் கண்டு மகிழ்ந்தாளாம்! “அரசர்கள் அங்கே மக்களுடன் சகஜமாகப் பழகுகிறார்கள். காயம் அடைந்த வீரர்களிடம் வந்து, அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இப்படி அரசனும் குடிகளும் நெருங்கிப் பழகுவதால், அந்த நாட்டில் எல்லாருமே சுதந்தரத்தை முக்கியமாகக் கருதுகிறார்கள். நம்மோடு கூட அவர்கள் போரிடத் தயார். காவிரிப் பூம்பட்டினம் என்ற ஊரில் ஒருவன் என்னிடம், ‘ஐயா! எங்கள் நாட்டைப் சேர்ந்த அரசர் எங்களை ஆள வேண்டுமேயழிய எங்கோ தொலைவில் எங்கள் மொழியும் பழக்கவழக்கமும் தெரியாத ஒரு சக்கரவர்த்தியின் பிரதிநிதி எங்களை ஆள்வதாவது. அவர்கள் நடை உடை பாவனை வேறு. எங்களுடையது வேறு என்றான். “பொதியில் மலையில் நமக்கு வெற்றி கிட்டியபின் தமிழ் அரசர்களுக்கு நம்மிடம் பின்னும் மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மௌரியர்கள் என்றால் சற்று மரியாதையாகவே பேசுகிறார்கள். அதோடு எங்கள் சாணக்கியர் தானே அங்கே முக்கிய மந்திரி அதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள்!” “உண்மைதானே…! தென்னாட்டைப்பற்றி நீ சொன்ன விவரமெல்லாம் மிகவும் ரசமாக இருக்கின்றன!” என்றான், சந்திரகுப்தன். “அவ்வளவும் உண்மை… பட்சபாதம் இல்லாமல் நேர்மையான முறையில் நம் சமுத்திரநாதன்
விஷயங்களைக் கவனித்திருக்கிறான்” என்றார், சாணக்கியர். “கேரளம் செழிப்பான நாடுதானா?” என்றான், ராட்சசன். “ஆமாம், மர வேலைக்குப் பயன்படும் கருங்காலி, செம்மரம், தேக்கு, சந்தனம் ஆகியன அங்கே தான் விசேஷம். தென்னை, பாக்கு, வாழை, பலா போன்ற பலன் தரும் மரங்களும் ஏராளம். மிளகு, வால் மிளகு, பிஸ்தா, ஏலம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, இலவங்கம் போன்ற வாசனைப் பொருள் தரும் பயிர்களும் அதிகம். மரகதம் போல் ஓரளவு விலைமதிப்புள்ள சில இரத்தினங்களும் அங்கே கிடைக்கின்றன. கோழிக்கோடு, திருவஞ்சி, திரிபுவனம், கொச்சி, கோட்டயம் எனப் பல துறைமுகங்களும் உண்டு. எல்லா விதமான க ப் ப ல் க ¬ ள யு ம் அ ங் « க க £ ண ல £ ம் . தொலைவிலுள்ள அராபியா முதலிய நாடுகளோடு அங்கிருந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். கேரளத்து ஆறுகளில் பருவமழை பெய்யும் சமயம் வெள்ளம் வரும். ஆனால், அவைகளைப் பெரிய ஆறுகள் என்று சொல்வதற்கில்லை. இருப்பவற்றுள்
பெரியவை பேரியாறும், பரத நதியுந்தாம். அந்த நாட்டில் பெரிய பெரிய தேக்கு மரங்களை மலைக்காடுகளிலிருந்து வெட்டி யானைகளைக் கொண்டு ஆற்றில் மிதக்க விடுவார்கள். இப்படி நீலாம்பூர் ஆற்றின் வழியாக அந்தத் தேக்கு மரங்கள் கோழிக்கோடு வந்து சேரும். அவற்றை வெட்டிய ஆள் ஒவ்வொருவனும் தான் வெட்டியதற்கு அடையாளமாக அவற்றில் முத்திரை போட்டிருப்பான். வேறு எவரும் அவற்றைத் தொடத் துணியமாட்டார்கள். சோழர்களும் பாண்டியர்களும் தங்கள் கோயில்களைக் கோபுரத்தோடு மாடமாளிகைகள் போல் அமைக்கிறார்கள். கேரளத்தில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கோயிலில் பூஜை செய்யும் பட்டர்கள் தங்கள் முறைக்காலம் முடியமட்டும் கோயிலிலேயே தான் இருக்க வேண்டும். ஆண்டவனுக்குத் தொண்டு புரியும் போது பெண்களோடு எந்த விதமான உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்குத் தான் இந்தக் கட்டுப்பாடு. & தொடரும்