
கொரோனாவுக்கு இந்த நிமிடம் வரை மருந்து, மாத்திரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் ’மரத்தடி வைத்தியர்கள்’ தங்கள் இஷ்டம் போல் ஆளாளுக்கு, மருந்து பொட்டலங்களை மடித்து கொடுத்த வண்ணம் உள்ளனர். அவற்றின் உண்மை தன்மை குறித்து அலசலாம்:
வதந்தி: கொரோனா வைரஸ் கிருமிகளை, கடுமையான குளிரும், பனியும் விரட்டி விடும்.
உண்மை: இதில் எள்ளளவும் உண்மை கிடையாது.குளிர் கொரோனாவை மட்டுமல்ல, எந்த ஒரு நோயையும் விரட்டும் என்பதற்கு நம்பகமான மருத்துவ ஆதாரம் இல்லை.
வதந்தி: சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா பறந்து ஓடிவிடும்.
உண்மை: ‘ஹாட் வாட்டர்’ கொரோனாவை தடுக்கும் என கூறப்படுவது வடிகட்டிய பொய்.
வதந்தி: தெர்மல் பரிசோதனைகள், கொரோனாவை தடுக்கும்.
உண்மை: இதுவும் பொய் தகவல் தான். ’தெர்மல் ஸ்கேனர்’ சாதாரண காய்ச்சலை மட்டுமே தடுக்கும்.
வதந்தி: கொரோனா பாதித்தவர் உடம்பில் ‘ஆல்ஹகால் அல்லது குளோரினை கொண்டு தெளித்தால் , அந்த நோய் நீங்கி விடும்.
உண்மை: கொரோனா வைரஸ்கள் ஒருவரது உடம்புக்குள் பாய்ந்து விட்டால், ஆல்ஹகாலும் சரி, குளோரினும் சரி, எந்த வைரசையும் கொல்ல முடியாது.கொரோனாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.
வதந்தி: நோய் எதிர்ப்பு மருந்துகள்,கொரோனாவை குணப்படுத்தும்
உண்மை: நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டி பயோடிக் மெடிசன்ஸ்) பாக் ̄ரியாக்களை கொல்லுமே தவிர, கொரோனாவை எந்த ரூபத்திலும் வெல்ல முடியாது.
வதந்தி: கொரோனா வைரஸ், முதியவர்களை மட்டுமே தாக்கும். இளைஞர்களை பாதிக்காது.
உண்மை: கொரோனாவுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. எந்த வயதினரையும் தாக்கும். வயதானவர்களுக்கு,ஏற்கனவே வேறு நோய் இருந்தால், கொரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும்.
வதந்தி: மருந்து கொடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.
உண்மை: கொரோனாவுக்கு டாக்டர்களும், வி…ஞானிகளும் எந்த ஒரு குறிப்பிட்ட மருந்தையும் இதுவரை பரிந்துரை செய்யவில்லை. (இனிமேல் கண்டு பிடித்தால்தான் உண்டு)