July 18, 2024

கே.பி.முனுசாமி வாகனம் மீது தாக்குதல்! சசிகலா முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்! டிடிவி தினகரன் முயற்சி பலிக்காது…!

முன்னாள் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பயணம் செய்த வாகனத்தின் மீது வன்முறை கூட்டத்தின் தூண்டுதலால் எதையோ வீசி அவரை தாக்க முயற்சி செய்தது என்பது கடும் கண்டனத்துகுறியது மட்டுமல்ல வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும். டிடிவி தினகரனை கடந்த கால அரசியல் வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க “செட்டப் அரசியல்” முறை அரசியல் என்பதும் வன்முறையாளர்களை வைத்து விரும்பியதை சாதிப்பது என்பதும் திட்டமிட்டு தவறான செயல்களில் ஈடுபட்டு அதை நியாயப்படுத்துவதும் டிடிவி தினகரனுக்கு கைவந்த களையாகும். அப்படி தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் பொழுது கே.பி.முனுசாமியின் வாகனம் தாக்கப்பட்ட செய்தியாகும்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்…

ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டதாக சொல்லி நாவலன் நெடுஞ்செழியன் பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, ஏ.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இப்படி இன்னும் பல தலைவர்கள் ஜெயலலிதா தலைமையிலானவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பொழுது தவறான வார்த்தைகளை கூறி விமர்சனம் செய்து வெளியேற்றப்பட்டார்கள். இப்படி வெளியேற்றப்பட்டவர்கள் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய பொழுது இதுபோன்றதொரு காட்சி அன்று பல ஆண்டுகளுக்கு முன்பாக அரங்கேற்றப்பட்டது.

அப்பொழுது திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த பொழுது, அதே பாணியில் ஆட்களை தயார் செய்து இப்பொழுது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பொழுது முனுசாமி மீது தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு அதிமுக தொண்டர்களுக்கு முனுசாமி விரோதிப் போல் சித்தரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இதே முனுசாமிக்கு ஆரத்தி எடுத்து ஆரத் தழுவி வரவேற்பு வழங்கி அவரை அமைச்சரவையில் அமைச்சராக்கி ஆதாயம் பார்த்தவர்கள் சசிகலாவும், டிடிவி தினகரனும் என்பதும் அதே இருவரும் சேர்ந்து தான் நாடாளுமன்ற தோல்விக்குப் பிறகு கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவியை திட்டம் போட்டு பறித்து எந்த பதவியும் இல்லாமல் அவரை ஒரம் கட்டியதும் இதே சசிகலாவும் தினகரனும் என்பது அதிமுக தொண்டர்களுக்கு நன்றாக தெரியும்.

முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடி பழனிசாமி மீதும், மூன்று முறை தற்காலிக முதலமைச்சராக நியமிக்கப்பட்டு இவர்களால் துரோகி பட்டம் சூட்டப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் மற்றும் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, இன்னும் பலர் அந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது அவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்தாமல் கே.பி.முனுசாமியின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்துதல் என்பது எத்தகைய வஞ்சத்தையும், வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதுமட்டுமல்ல இதே பாணியில் வன்முறையை கையில் எடுத்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பண்ருட்டியாரின் கட்அவுட் வைத்து வரவேற்பு வழங்கிய பொழுது அந்த கட்அவுட்டை அவசரஅவசரமாக மதுசூதனை விட்டு கழற்றி எறிந்து விட்டு அவர் மீதும் வன்முறை காட்டினார்கள். அப்பொழுதும் சசிகலா, நடராஜன் இதுபோல் பல விஷயங்களில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து உடன்பிறந்த சகோதரரைப் பிரித்து தாமோதரனை மிரட்டி பணியவைக்க முயற்சி செய்து அது படுதோல்வி கண்டவர் தான் டிடிவி தினகரன் என்பதும் அந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைப்பெற்றது என்பதும் அனைவரும் தெரிந்த ஒன்று. இப்படி பல்வேறு காலகட்டங்களில் வன்னியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் டிடிவி தினகரனும், சசிகலா நடராஜன் அவர்களும் நடந்து கொள்வதும் ஏற்புடையதும் அல்ல. இது அரசியலும் அல்ல. இது நட்புமுறையை தாண்டி வெறுப்பை ஏற்படுத்தி சாதி மோதலுக்கு மட்டுமே வழிவகுக்க கூடிய ஒன்றாகும்.

தற்போது சசிகலாவை சுற்றி சூழ்திருப்பவர்கள் முழுக்க அதிகளவில் பாதுகாப்பு வளையமாக இருப்பவர்கள் வன்னியர்கள் மட்டுமே டிடிவி தினகரனும், சசிகலாவும் உணரவேண்டும். ஒருபக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சரும் இந்நாள் அமமுக கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களின் ஒருவருமான செந்தமிழன், இன்னொருவர் வைத்தியநாதன் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்கள் இன்றும் அருகில் நிற்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் அதிகாரத்திற்கு சசிகலா வந்துவிட்டால் இவர்களெல்லாம் எந்த இடத்தில் இருப்பார்கள் என்பதே தெரியாது தூக்கி வீசப்படுவார்கள். தனது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூட இவர்களால் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் மற்றும் பணம் சம்பாதித்தவர்கள் கூட தற்போது இவர்கள் உடன் இல்லை என்பதும் அவர்கள் எல்லாம் இவர்களுக்கு எதிராக நின்று அரசியலில் களம் ஆடுகிறார்கள் என்பதும் அதிமுகவினர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும்.

உதாரணத்திற்கு ஒ.பன்னீர்செல்வம், செல்லூர் ராஜ், ஆர்.வி.உதயகுமார், வைத்தியலிங்கம் இப்படி பலரை குறிப்பிடலாம். கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கட்சி கட்டுப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு அரசியலில் பல நேரம் கே.பி.முனுசாமி அவர்கள் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அரசியல் ரீதியான விமர்சனம் செய்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயமான ஒரு சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் அவரை குறிவைத்து தாக்குவது என்பது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பை தான் ஏற்படுத்துமே தவிர அதிமுகவை கைப்பற்றுவது என்பது உதவாது.

ஒரு காலத்தில் தெற்கே தேவர் என்றும் வடக்கே வன்னியர் என்றும் அண்ணன் தம்பிகளாக அரசியல் நடைபெற வேண்டும் என்றும் வீரதியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் கடலூர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி அவர்களும் இருந்த நிலையில் வன்னியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதால் எந்த பயனும் இல்லை. அதிமுக தலைமை நேற்று நடைபெற்ற சம்பவத்தைப் பார்த்து தனது துணிச்சலையும் கடுமையான கண்டனத்தையும், வெளியிட்டு சாதி, மத, மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்ப்பட்ட இயக்கம் அதிமுக என்பதை பொதுமக்களுக்கும் கட்சியனர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் அதிமுக நிர்வாகி.

  • டெல்லிகுருஜி